Monday 6 February 2012

சொந்த வீட்டிலேயே கைவரிசை : ரூ 20 லட்சம், 55 சவரன் நகை கொள்ளை


திருவொற்றியூரில் பட்டப்பகலில் ரூ 20 லட்சம், 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவரது மகன் மற்றும் நண்பர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் ராஜிவ்காந்தி நகரில் வசிப்பவர் கணேசன் (50). பாரிமுனையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அகில இந்திய மாநில அரசு நான்காவது பிரிவு ஊழியர்கள் சம்மேளன தலைவராக உள்ளார். இவரது மனைவி மாலதி (47), உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர்.
கடந்த 3ம் தேதி காலை, கணேசன் குடும்பத்தினருடன் கூடுவாஞ்சேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார். இதை பயன்படுத்திக் கொண்ட ஆசாமிகள், வீட்டில் இருந்த ரூ 20 லட்சம், 55 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் லட்சுமி, எண்ணூர் உதவி கமிஷனர் செல்வரசு, இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கொள்ளை தொடர்பாக, கணேசனின் இளைய மகன் ரத்தினசெல்வம் (22) அவரது நண்பர் காசிமேடு ஜெயபால் (எ) மோகன் (23) ஆகியோரை கைது செய்து, கொள்ளை பொருட்களை மீட்டனர். ரூ 5 லட்சம் மதிப்புள்ள காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கணேசனின் மகன் ரத்தினசெல்வம் அஞ்சல் வழி மூலம் பட்டப்படிப்பு படித்து வந்தார். அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க ஆசை. இதை தந்தையிடம் கூறியிருக்கிறார். ஆனால், கணேசன் பணம் கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால், ரத்தினசெல்வம் விரக்தியில் இருந்தார். இருப்பினும், அதை வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி கூடுவாஞ்சேரியில் உறவினர் குடும்ப திருமணத்துக்கு கணேசன், ரத்தினசெல்வம் உள்ளிட்ட அனைவரும் காரில் புறப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ரத்தினசெல்வம் முடிவு செய்தார். அதன்படி, காரில் செல்லும்போது தனது நண்பரான ஜெயபாலை போனில் தொடர்பு கொண்டார்.
சமையல் அறையில் மிக்சிக்கு அடியில், வீட்டின் சாவி இருப்பதையும், அதை எடுத்து பீரோவை திறக்குமாறும் கூறியிருக்கிறார். பீரோவில் எந்த அறையில் பணம், நகை உள்ளது என்ற விவரத்தையும் செல்போன் மூலம் தெளிவாக தெரிவித்திருக்கிறார். குறுஞ்செய்தி மூலம் உடனுக்குடன் கட்டளைகளையும் பிறப்பித்து கொண்டிருந்தார். இதை அடிப்படையாக வைத்து ஜெயபால் கொள்ளையடித்திருக்கிறார்.
முன்னதாக, வீட்டில் இருந்த நர்சிங் கோர்ஸ் படிக்கும் இளம்பெண் அமுதவல்லி, தாத்தா கண்ணன் ஆகியோர் வீட்டில் இருக்கிறார்களா? என்று விசாரித்து, அதன் பின்னரே நண்பரை ரத்தினசெல்வம் அனுப்பியிருக்கிறார். கொள்ளையடித்த பணம், நகைகளை தண்டையார்பேட்டையில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருக்கின்றனர்.
பின்னர், கொள்ளை பற்றி ஒன்றுமே தெரியாதது போல், தந்தையுடன் சேர்ந்து திருடர்களை தேடுவது போல் நடித்துள்ளார். இதற்கிடையில், ரூ 5 லட்சம் மதிப்புள்ள பழைய கார் ஒன்றை வாங்கி சுற்றியிருக்கின்றனர்.
கணேசனின் கார் டிரைவர் ராஜேஷ் என்பவர், ரத்தினசெல்வம் அடிக்கடி செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்புவதையும், போனில் பேசியதையும் கவனித்திருக்கிறார்.
அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே ரத்தினசெல்வம், ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தோம். கொள்ளையடிக்கப்பட்ட அறையில் ராதாவின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த, மேலும் 100 சவரன் நகைகள் இருந்தது. அது, அப்படியே இருந்தது. குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் பிடித்து நகை, பணத்தை மீட்ட தனிப்படையினருக்கு பாராட்டுகள்.
இவ்வாறு செந்தாமரைக்கண்ணன் கூறினார்.

No comments:

Post a Comment