தமிழகத்தில் முதன்முதலாக அரசு சார்பில் நாகர்கோவில் கோட்டாறில் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி தொடங் கப்பட்டது. மூன்று ஆண்டுகள் போராட்டத்துடனே செயல்பட்ட இந்த கல்லூரிக்கு தற்போது மத்திய அரசு தேவையான அத்தியாவசிய வசதிகள் இல்லை என கூறி 3வது ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. 2-ம் ஆண்டிற்கான ஆய்வின் போதே போதுமான பேராசிரியர்கள், மூலிகை பண்ணை இன்மை, பணியாளர்கள், மருந்து தாயரிப்பு கூடம் இன்மை, போதுமான நோயாளிகள் இன்மை, நூலக வசதி உள்ளிட்ட பலவற்றை சுட்டிக்காட்டி அங்கீகாரம் வழங்க மறுத்தது. எனினும் தமிழகத்தில் உள்ள மருத்துவ துறை அதிகாரிகள் அடுத்த ஆண்டிற்குள் அடிப்படை வசதி களை நிறைவேற்றிவிடுவோம் என்ற உறுதிமொழி அளித்து ஒருவழியாக அங்கீகாரம் பெற்றனர். ஆனால் அதன் பின்னர் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் 3ம் ஆண்டு அனுமதிக்கு வந்த ஆய்வுக்குழு ஆய்வின்போதே இங்குள்ள கல்லூரி நிர்வாகத்தை கேள்விமேல் கேள்வி கேட்டு எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எதிர்பார்த்தபடியே மத்திய அரசு அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டது. இதன்பின்னர் தமிழக அரசு இக்கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகளுக்கு பதில் மத்திய அரசிடம் பேசவே நேரம் செலவிட்டனர். மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து 3ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியும் பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. 3-ம் ஆண்டில் 44 மாணவிகளும், 4 மாணவர்களும் தமிழகம் முழுவதுமிருந்து சேர்க்கப் பட்டனர். ஆனால் வகுப்புகள் மட்டும் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு போதுமான ஆசிரியர்கள் நியமித்தால் மட்டுமே நடப்பாண்டில் அனுமதி எனக்கூறிவிட்டது. மேலும் தங்களை பிரதிவாதியாக சேர்க்கவில்லை எனவும் கூறியது. எனவே மத்தியஅரசை பிரதிவாதியாக சேர்க்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் உறுதியான முடிவால் ஆயுர்வேத மற்றும் சித்தா மாணவர்கள் கலங்கிப் போயுள்ளனர். வழக்கமாக மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை முடிந்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் வகுப்புகள் தொடங்கப்படும். 18 மாதங்கள் படிப்பிற்கு பின்னர் பிப்ரவரியில் தேர்வுகள் நடைபெறும். தேர்வு எழுத மாணவர்கள் 80 முதல் 90 சதவீதம் வரை வருகை பதிவு அவசியம். தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டு விடுமுறையே இன்றி வகுப்புகள் நடத்தினால்தான், 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமாவது தேர்வுகளை எழுதலாம். மேலும் காலம் நீட்டித்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அடுத்த ஆண்டு புதிதாக சேரும் ஜூனியர் மாணவர்களுடன் சேர்ந்து தேர்வு எழுத வேண்டிய நிலை வரும். இதனால் ஒரு ஆண்டும் வீணாகி சீனியாரிட்டியும் பறிபோகும் நிலை ஏற்படும்.
இதற்கு தற்போதைய மருத்துவ கல்லூரி, தமிழக இந்திய மருத்துவ துறை அதிகாரிகள், நிதி ஒதுக்க வேண்டிய துறை அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் கல்லூரி நன்மைக்காக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் சிலரையும் உயர் அதிகாரிகள் கட்டம் கட்டியதில் காட்டிய ஆர்வத்தை மாணவர்கள், நோயாளிகள் மீது காட்டாமல் போனதும் காரணம் எனக்கூறப்படுகிறது. (Dinkaran)
No comments:
Post a Comment