Monday, 6 February 2012

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் சிரசாசனம் செய்த இளைஞர் : சுற்றுலா பயணிகள் சிலிர்ப்பு


குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மாத்தூரில் உள்ள தொட்டி பாலம், ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் என்ற பெருமைக்குரியது. 101 அடி உயரம் கொண்ட இந்த தொட்டிப்பாலம், காமராஜர் ஆட்சி காலத்தில் சிற்றாறு அணையில் இருந்து சிற்றாறு பட்டணம் கால்வாய் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக இரு மலை குன்றுகளை இணைத்து கட்டப்பட்டதாகும்.
இதன் ஒரு முனை அருவிக்கரை ஊராட்சியும் மறுமுனை வேர்கிளம்பி பேரூராட்சியையும் இணைக்கிறது. சுமார் 28 தூண்கள் இந்த பாலத்தை தாங்கி நிற்கின்றன. கம்பீரமாய் காட்சிதரும் இந்த தொட்டிப்பாலத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த தொட்டிப்பாலத்தின் கைப்பிடிச்சுவரில் ஏற்கனவே மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோசுவா என்பவர் தனியாக நடந்து சென்றும், தண்ணீர் குடத்தை சுமந்து சென்றும் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மார்த்தாண்டம் உதச்சிகோட்டையைச் சேர்ந்த ராஜேஷ்(26) என்ற சென்ட்ரிங் தொழிலாளி இதில் தலைகீழாக நின்று சாதனை படைத்துள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான நிலையில் 101 அடி உயரத்தில் அவர் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்த சம்பவம் அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணி கள் மத்தியில் சிலிர்ப்பையும் ஒரு வித பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இது குறித்து ராஜேஷ் கூறுகையில், 8ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறுவயது முதலே சாதனை படைக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஏற்கனவே கிரிக்கெட் பந்தின் மேல் தலையை வைத்து சிரசாசனம் செய்துள்ளேன். ஓடும் காரிலும் சிரசாசனம் செய்துள்ளேன். சாதனை செய்வதற்காக வீட்டில் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தேன். தற்போது மாத்தூர் தொட்டிப்பால சுவரில் சிரசாசனம் செய்துள்ளேன். இதற்கு ஏராளமான பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து பல சாதனைகள் படைக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்றார். (Dinakaran)

1 comment:

  1. Best wishes to Mr.ராஜேஷ் பல சாதனைகள் படைக்க வேண்டும்

    ReplyDelete