Monday, 13 February 2012

பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா : மாணவர்கள் பரிதவிப்பு : பெற்றோர் கோபம்


எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேரத்தில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதற்காக மாநில அளவில், மாவட்ட அளவில், தேசிய அளவில், தென்னிந்திய அளவில் என்று 4 நிலைகளில் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அழைத்து செல்லப்படும் ஆசிரியர்களுக்கு பாடப்பகுதியை சம்பந்தப்படுத்தி அது தொடர்பான இடங்கள் விளக்கப்படுகின்றன.
குமரி மாவட்டத்தில் இருந்து மாநில சுற்றுலாவுக்கு 150 பேரும், மாவட்ட சுற்றுலாவுக்கு 150 பேரும், தேசிய சுற்றுலாவுக்கு 91 பேரும், தென்னிந்திய சுற்றுலாவுக்கு 101 பேரும் என்று 492 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகின்றனர். முதல்கட்டமாக மாநில சுற்றுலாவுக்கான 68 ஆசிரியர்கள் கொண்ட குழு கடந்த 9ம் தேதி புறப்பட்டு சென்றது. வரும் 14ம் தேதி திரும்புகிறது. அன்று 82 ஆசிரியர்கள் மாநில சுற்றுலாவுக்கு செல்ல உள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட சுற்றுலாவும், அடுத்து தேசிய அளவிலான சுற்றுலாவும், பின்னர் தென்னிந்திய அளவிலான சுற்றுலாவும் நடைபெற உள்ளது. இதில் வெவ்வேறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்றுவர உள்ளனர். இதுபோன்று தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்காக மாவட்டத்திற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை மொத்தம் தமிழகத்திற்கு மத்திய, மாநில அரசுகளால் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா செல்கின்ற ஆசிரியர்கள் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெறுவதற்கான கால அட்டவணை வகுக்கப்பட்டுள்ளன. விரைவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான இந்த சுற்றுலா திட்டம் மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் கோபம் அடைய வைத்துள்ளது.
அதிகாரிகளின் தவறே காரணம்
பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கல்வித்துறையில் உள்ள அதிகாரிகளின் தவறுகள் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மார்ச் மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை செலவு செய்தாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எதை பற்றியும் கவலைப்படாமல் தேர்வு நேரத்தில் சுற்றுலா திட்டம் வகுத்துள்ளனர். 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள்தான் இந்த சுற்றுலாவில் பங்கேற்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே இதுபோன்ற திட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதின் மூலம் மாணவர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், முழு பயனுள்ளதாகவும் அமையும்" என்றார்.

No comments:

Post a Comment