போலி அழகு சாதன பொருட்கள் விற்றவர் மருத்துவமனையில் ஓராண்டுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என டெல்லி நீதிமன்றம் புதுமையான தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் வீரேந்தர் குமார்(60). போலி அழகு சாதன பொருட்கள் விற்றதற்காக கடந்த 1985ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு அப்போது 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்கும்படி வீரேந்தர் குமார் மேல்முறையீடு செய்தார். 25 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மனு டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி சவிதா ராவ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வீரேந்தர் குமாரின் வேண்டுகோளை ஏற்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:
மனுதாரர் செய்த குற்றத்தால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரிஜினல் கம்பெனி தயாரிப்பு என நினைத்து போலி பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் வருவாய் இழப்பு.
இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை சிறைக்கு அனுப்புவதால் எந்த பயனும் இல்லை. எனவே, அவர் டெல்லி செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் சமூக சேவை செய்ய வேண்டும். மருத்துவமனை காண்காணிப்பாளர் கூறும் சிறு வேலைகளைக் கூட செய்ய வேண்டும். வாரத்தில் நான்கு நாட்கள் வீதம் ஓராண்டு இந்த சேவை செய்ய வேண்டும். வீரேந்தர் குமார் வேலை செய்யும் விதம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் காலாண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment