Monday, 13 February 2012

சிக்க போவது யார் யார்? : வருமான வரித் துறை திடீர் அதிரடி ஆய்வு


கடந்த 2 ஆண்டில் வருமானத்தை மறைத்து புது வீடு வாங்கியது, விற்றது மற்றும் கிரெடிட் கார்டு, பாண்டு, பத்திரங்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்தது தொடர்பாக வருமான வரித் துறை திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்த வகையில், கணக்கு காட்டாமல் பல கோடி ரூபாய் புழக்கம் நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது போன்ற 22 கோடி பண பரிவர்த்தனைகள் மீது விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமானம் மற்றும் அதற்கு வரி செலுத்திய விவரம் குறித்து ஆண்டுதோறும் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள், வீடு வாங்கவோ, விற்கவோ, மற்றும் டிபாசிட், பங்கு பத்திரங்களில் முதலீடு போன்ற இதர விஷயங்களுக்கோ லட்சக்கணக்கில் பரிவர்த்தனை செய்திருந்தால், அது பற்றி ரிட்டர்ன்சில் குறிப்பிட வேண்டும்.
ஆனால், சிலர் இந்த வகையில், கணக்கில் காட்டாமல் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்கிறார்கள். பணத்தை அவர்கள் வங்கிக் கணக்குக்கு வந்திருந்தாலும், மற்றவர்களுக்கு அவர்கள் கொடுத்திருந்தாலும் அந்த பணத்திற்கான ஆதாரம் என்னவென்று வருமான வரித் துறைக்கு சொல்ல வேண்டும். வருமான வரி அறிக்கையில் எந்த விவரத்தையும் மறைக்க கூடாது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் (2009&10 மற்றும் 2010&11) இப்படி கணக்கு காட்டாமல் பல கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளதை வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது. மொத்தம் 22 கோடியே 52 லட்சத்து 6,979 பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மீது விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது பற்றி, வருமான வரித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டில்  ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீடுகளை வாங்கிய மற்றும் விற்ற 6 லட்சத்து 23,384 பேர் அது பற்றி வருமான வரி கணக்கில் சரிவர ஆதாரம் காட்டவில்லை. அதேபோல்,   ரூ  10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட 27 லட்சத்து 50,545 பரிவர்த்தனைகளும், கிரடிட் கார்டுகளுக்கு பணம் செலுத்திய 15 லட்சத்து, 23,728 பரிவர்த்தனைகளும், மியூச்சுவல் பண்ட், பங்கு பத்திரங்கள் போன்றவற்றுக்கு செலுத்திய 32 லட்சத்து 21,695 பரிவர்த்தனைகளும் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படி வீடு வாங்கியது, விற்றது மற்றும் இதர பணபரிவர்த்தனைகளில் கடந்த 2 ஆண்டில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி கட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வீடு வாங்கிய, விற்ற தனி நபர்களும், டிபாசிட் உட்பட இதர பணபரிவர்த்தனைகளில் சிறிய கடைகள், கம்பெனிகள் போன்றவையும் சிக்கியுள்ளன.
அவர்களாகவே, விவரம் தெரிவித்து வரியை கட்டிவிட்டால் நல்லது. அதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனித்தனியாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசுக்கு அவர்கள் செவிசாய்க்காமல் இருந்தால், அவர்கள் மீது விரைவில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஏன் இந்த நடவடிக்கை?
வருமான வரித்துறை பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்வோரைதான் இதுவரை கண்காணிப்பு வலையில் வைத்திருந்தது. இப்போது நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தில் பணப் புழக்கம் உள்ள நபர்களையும் குறிவைத்துள்ளது. அதன் முதல் அதிரடிதான் இது. வருமான வரித்துறைக்கு இந்த நிதி ஆண்டுக்குள் 5.32 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி வருவாயை ஈட்டியாக வேண்டிய இலக்கு உள்ளது. இதை எட்டுவதற்கு இப்படி புது அதிரடியில் இறங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிக்குவது யார் யார்? 
** புது வீடு வாங்குவதற்கு மாத சம்பளதாரர்கள், சிறிய பிசினஸ் செய்வோர் வங்கி கடன் வாங்குகின்றனர். அவர்கள் எந்த வகையிலும் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பில்லை.
** முழு தொகையையும் ரொக்க பணமாக தந்து, புது வீடு வாங்குவோர்தான் முறைப்படி அதை வருமானவரி அறிக்கையில் காட்டியிருக்க வேண்டும். அவர்கள் பணம் வந்ததற்கான ஆதாரம் இல்லாமல் இருந்தால் சிக்குவார்கள்.
** வீடு விற்போர், அந்த வருமானத்திற்கு வரி கட்டியிருக்க வேண்டும். அவர்களுக்கு தான் வருமானவரி செலுத்தும் பொறுப்பு அதிகம்.
** மற்றபடி, டிபாசிட் செய்வோர், பாண்டு, பத்திரம் வாங்குவோரும் அதற்கு கணக்கு இல்லாமல் இருந்தால் நடவடிக்கைக்கு ஆளாவர்.
** மாத சம்பளம் வாங்குவோருக்கு வரி பிடித்தம் மாதம் தோறும் செய்யப்படுவதால், அவர்களுக்கு வீடு வாங்கினாலும் எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment