Tuesday, 17 April 2012

கள்ளக்காதலுக்கு இடையூறு : கணவன் படுகொலை


சந்தியா-கனகராஜ்-மோகன்-மணிகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நெல்லை துப்புரவு தொழிலாளி கொடைக்கானல் மலையிலிருந்து உருட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி அவரது கள்ளக்காதலன் உட்பட 4 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நெல்லை சந்திப்பு ரயில்வே காலனியை சேர்ந்தவர் பரமசிவன் (49). இவர் நெல்லை ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சரவணகுமார் (23). இவர் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த சந்தியாவுக்கும் (20) கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

கடந்த 8ம் தேதி கொடைக்கானலிலிருந்து சரவணகுமார், சந்தியா ஆகியோர் நெல்லைக்கு வந்தனர். மறுநாள் சரவணகுமார் நண்பர்களை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால், இரு நாட்கள் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து பரமசிவன் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சந்தியாவின் உறவினரான கொடைக்கானலை சேர்ந்த கனகராஜ், இவரது நண்பர்கள் மோகன், மணி ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சந்தியாவுக்கு திருமணத்திற்கு முன்பே கனகராஜூடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. சரவணகுமார் வீட்டில் இல்லாதபோது சந்தியாவும், கனகராஜூம் நெருக்கமாக இருந்துள்ளனர். இது பற்றி அறிந்ததும் சரவணகுமார் கண்டித்துள்ளார். இதனால் சரவணகுமாரை கொலை செய்ய சந்தியா, கனகராஜ், மோகன், மணி ஆகிய 4 பேர் திட்டமிட்டனர். பெற்றோர் வீட்டிலிருந்த சரவணகுமாரை கடந்த 9-ம் தேதி கனகராஜ், மோகன், மணி ஆகியோர் நெல்லை சந்திப்பில் உள்ள எஸ்டிடி பூத்திலிருந்து பேசி மது அருந்த அழைத்தனர்.

அதை நம்பி அவர்களுடன் சென்ற சரவணகுமார் போதையில் இருந்தார். அவரை ஒரு காரில் கொடைக்கானல் அருகேயுள்ள மயிலாடும்பாறைக்கு அழைத்து சென்றனர். அங்கும் அவருக்கு மதுவில் விஷம் கலந்து குடிக்க கொடுத்தனர். மயக்கம் அடைந்த அவரை மலையில் இருந்து 400 அடி பள்ளத்தில் உருட்டி விட்டு கொலை செய்தனர். இந்த தகவல் விசாரணையில் தெரியவந்தது.

நெல்லை சந்திப்பு போலீசார் கொடைக்கானலுக்கு சென்று சந்தியா, கனகராஜ், மோகன், மணி ஆகியோரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அழுகிய நிலையில் கிடந்த சரவணகுமாரின் உடலை போலீசார் மீட்டனர். தொடர்ந்து 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment