பைபாஸ் வழியாக அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் & மதுரை பாசஞ்சர் உள்ளிட்ட ரயில்களை மக்களுக்கு பெரிதும் பயன்பாட்டில் இல்லாத நாகர்கோவில் டவுன் ரயில்நிலையம் வழியே மட்டும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் குமரி மாவட்ட ரயில்நிலைய பகுதிகள் வருகின்றன. இங்கிருந்து திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் முக்கிய ரயில்நிலையமாக நாகர்கோவில் ஜங்ஷன் (கோட்டார்) ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தின் ரயில்வே மேம்பாட்டிற்கு முழுக்க முழுக்க திருவனந்தபுரம் கோட்டத்தையே நம்பியிருக்கின்ற சூழல் மக்களுக்கு உள்ளது. புதிய ரயில்கள் இயக்கம் முதல், ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்பாடு வரை குமரி மாவட்டம் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஒதுக்கப்படுகின்ற நிதியில் மிகவும் சொற்ப அளவே குமரி மாவட்ட பகுதிகளுக்காக செலவழிக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள ரயில்நிலையங்களை மேம்படுத்துவதற்கான புதிய பரிந்துரைகள் ஏதும் குறித்த காலத்தில் செயல்படுத்தப்படுவதில்லை. இந்தநிலையில் தற்போது இருக்கின்ற வசதிகளையும் பறிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் திருவனந்தபுரம் ரயில்வே ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புதிதாக இயக்கப்படுகின்ற ரயில்கள் நிறுத்த இட வசதியின்மையால் அவற்றை நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து இயக்குவதாக அறிவித்துள்ளனர். அந்த ரயில்கள் நள்ளிரவு நேரங்களில் யாருக்கும் பயன்படாத வேளைகளில் புறப்படுகிறது. இது கேரள மக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருவனந்தபுரம் வழியாக செல்லும் பிலாஸ்பூர் & திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், ஹாப்பா &திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நாகர்கோவில் வழியாக வந்து செல்கின்றபோதும் பைபாஸ் வழி தடத்தில் உள்ள நாகர்கோவில் டவுன் ரயில்நிலையத்தில் நள்ளிரவு நேரங்களில் இயக்கப்படுகிறது. மாவட்டத்தின் பிரதான ரயில் நிலையமான கோட்டார் ரயில் நிலையத்திற்கு இந்த இரு ரயில்களும் வருவதில்லை. இந்த ரயில்கள் நள்ளிரவு நேரங்களில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது.
தற்போது பயணிகளுக்கு பெரிதும் பயன்பாட்டில் இருந்து வரும் சென்னை & திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் & சென்னை எக்ஸ்பிரஸ், கொல்லம் & மதுரை பாசஞ்சர் ஆகிய 3 ரயில்களையும் நாகர்கோவில் டவுன் ரயில்நிலையம் வழியாக மட்டுமே இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ரயில்கள் தற்போது கோட்டாரில் உள்ள நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து இன்ஜின் மாற்றப்பட்டு செல்கிறது. இதனால் காலவிரயம் ஏற்படுகிறது என்ற காரணத்தை காட்டி நிறுத்தத்தையே நிறுத்திட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அண்மையில் திருவனந்தபுரத்தில் நடந்த ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ரயில்வே சார்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்துகொண்ட நாகர்கோவிலை சேர்ந்த உறுப்பினர்கள் நாகராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முடிவை கைவிட வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக ஹெலன்டேவிட்சன் எம்.பி.யும் ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளார். தெற்கு ரயில்வேயின் இந்த முடிவு குமரி மாவட்ட ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த முடிவை ரயில்வே கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment