Wednesday, 4 April 2012

கவனித்த கண்காணிப்பு கேமரா : திருடர்களுடன் சேர்ந்து பைக் திருடிய போலீசார்

திருடன்களுடன் சேர்ந்து பைக்கை திருடிய போலீசார், கண்காணிப்பில் கேமராவில் வசமாக சிக்கினர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கோத்ரூட், தகானுகர் காலனி குடியிருப்பு வளாகத்தில் தன்மய்புரி சொசைட்டி என்ற கட்டிடம் உள்ளது. இதில் வசிப்பவர் அவினாஷ் தேஷ்முக். இங்கு வசிப்பவர்கள் தங்கள் வாகனங்களை கட்டிட வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு அவினாஷ் வழக்கம் போல் தனது பைக்கை பார்க்கிங் பகுதியில் நிறுத்தினார். காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது பற்றி போலீசில் புகார் செய்தார். இந்த கட்டிடத்தில் இதுவரை எந்த திருட்டு நடந்ததில்லை. முதல் முறையாக பைக் திருடு போனது கட்டிட வாசிகளுக்கு கவலை அளித்தது.
இதனால், கட்டிட வளாகத்தில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்க முடிவு செய்தனர். அந்த காட்சிகளை பார்த்த அவர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், திங்கட்கிழமை அதிகாலை 4.58 மணியளவில் 3 போலீஸ்காரர்கள், 2 திருடர்களுடன் வந்து அவினாஷின் பைக்கை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதிகாலையில் தன்மய்புரி கட்டிட வளாகம் அருகே போலீஸ் ஜீப் ஒன்று வந்து நிற்கிறது. அதில் இருந்து சீருடை அணிந்த 3 போலீசாரும், 2 வாலிபர்களும் இறங்கி, வாகனங்கள் இருக்கும் பகுதிக்கு செல்கின்றனர். அவினாசின் பைக்கை காட்டி விட்டு போலீசார் அங்கிருந்து செல்கின்றனர். அவர்களுடன் ஒரு வாலிபனும் சென்று விடுகிறான். மற்றொரு வாலிபன், அந்த பைக்கில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை எடுத்து மற்றொரு பைக்கில் வைக்கிறான். பிறகு, ஜீப் அருகே காத்திருக்கும் ஒரு போலீஸ்காரரை உள்ளே அழைக்கிறான். அவர் வந்ததும், 2 பேரும் சேர்ந்து பைக்கை தள்ளிக் கொண்டு வெளியே செல்கின்றனர்.
இந்த வீடியோ காட்சியை போலீசாரிடம் தன்மய்புரி கட்டிடவாசிகள் ஒப்படைத்தனர். இந்த செய்தி அனைத்து மராத்தி தொலைக்காட்சிகளிலும் நேற்று ஒளிபரப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடும் நடவடிக்கை
இது பற்றி புனே நகர துணை போலீஸ் மிஷனர் ஞானேஸ்வர் பட்தரே கூறுகையில், “கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. அது முடியும் முன்பாக, போலீசார் பைக்கை திருடியதாக சொல்ல முடியாது. ஏதாவது வழக்கு சம்பந்தமாக கூட பைக்கை அவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம்” என்றார். மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறுகையில், “பைக்கை போலீசார் திருடியது உண்மை என தெரிந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

No comments:

Post a Comment