கூடங்குளம் அணுமின்நிலைய பாதுகாப்பு ஆய்வறிக்கை வெளியிட தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் உதயகுமார், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலை&1 மற்றும் 2ன் பாதுகாப்பு ஆய்வறிக்கை, களஆய்வு அறிக்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை ஆகியவற்றை வெளியிடும்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.
இதை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் சைலேஷ்காந்தி, “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை பற்றி ஆய்வு நடத்தி தயாரித்துள்ள அறிக்கைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக இந்திய அணுமின்கழகம் வெளியிட வேண்டும். 30 நாட்களில் இதை செய்ய வேண்டும். இந்த அறிக்கைகள் வெளியிடப்படுவதால் இத் திட்டம் பற்றி பொது மக்களுக்கு தெளிவான பார்வை கிடைக்கும்“ என்று நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.
இதுகுறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:
வெளிநாடுகளில் அணுஉலை குறித்த பாதுகாப்பு ஆய்வறிக்கை, கள அறிக்கை ஆகியவை இணையதளத்தில் உள்ளது. ஆனால் நமது நாட்டில் அது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. பல தடவை இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட பின்பும் ரஷ்ய நிறுவனத்தில் தகவல்கள் இருப்பதாகக் கூறி அதனை டிஸ்மிஸ் செய்தனர்.
தற்போது பாதுகாப்பு குறித்த இந்த ரகசிய தன்மையை முறியடிக்கும் தீர்ப்பாக மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். ரஷ்ய நிறுவனங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மக்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் செயல்படும் அரசுகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment