Thursday, 3 May 2012

கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை : உறவினர்கள் மகிழ்ச்சி

சட்டீஸ்கர் அரசுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம், 12 நாளாக இருந்த பரபரப்பு, முடிவுக்கு வந்தது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டராக பதவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் 8 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து வரும் 'பசுமைவேட்டையை' நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முன்னதாக, இது தொடர்பாக மாவோயிஸ்ட் தூதர்களுக்கும், அரசு தூதர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கிடையே, 8 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்து தூதர்களுடன் தால்மெட்லா காட்டுக்குள் திங்கட்கிழமைக்குள் அனுப்பினால் கலெக்டரை விடுதலை செய்வதாக மாவோயிஸ்டுகள் திடீரென அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்டு தூதர்களான சர்மா, ஹர்கோபால் ஆகியோருக்கும் அரசு தரப்பு தூதர்களான நிர்மலா புச், மிஸ்ரா ஆகியோரிடையே 4வது சுற்று பேச்சுவார்த்தையில் கலெக்டர் கடத்தல் விவகாரத்துக்கு சுமுக தீர்வு எட்டப்பட்டது.

சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தினரை விடுவிக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனையை ஏற்க சட்டீஸ்கர் அரசு மறுத்துவிட்டது. ஆனால், சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் மீதான வழக்குகளை ஆய்வு செய்ய நிர்மலா புச் தலைமையிலான உயர் அதிகார குழு அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி கூறப்பட்டது.

இதை மாவோயிஸ்ட் தூதர்கள் ஏற்றுக் கொண்டனர். இதைதொடர்ந்து சட்டீஸ்கர் அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கலெக்டரை விடுதலை செய்வது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து 48 மணி நேரத்தில் கலெக்டர் அலெக்ஸ் விடுதலை செய்யப்படுவார் என்று மாவோயிஸ்ட் தூதர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாவேயிஸ்ட்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தால்மெட்லா கிராம மக்கள் முன்னிலையில், கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை 3ம் தேதி விடுவிக்க தயாராக உள்ளோம்’’ என்று கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை மீட்க தூதுக்குழுவினர் இன்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் ஜிந்தல்நாருக்கு சென்றனர். அங்கிருந்து பைக் மூலம் தால்மெட்லா காட்டுப்பகுதிக்கு சென்றனர். தால்மெட்லாவில் தூதுக் குழுவிலுள்ள பி.டி.சர்மாவிடம் மாவோயிஸ்டுகள் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை ஒப்படைத்தனர். இதனையடுத்து, பைக் மூலம் கலெக்டரை ஜிந்தல்நாரு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு மேல் ராய்பூருக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியில் மனைவி ஆஷா மற்றும் உறவினர்கள்

மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்யப்பட்ட செய்தி கேட்ட அவரது மனைவி ஆஷா, அப்பா, உறவினர்கள் மற்றும் சுக்மா மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். (Dinakaran)

No comments:

Post a Comment