களியக்காவிளை ஒற்றாமரம் சோதனை சாவடியில் தமிழக போக்குவரத்து துறையினர் வழங்கிய டூரிஸ்ட் அனுமதி ரசீதை கேரள போலீசார் கிழித்து எறிந்ததால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள அமைச்சர் தலையிட்டதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
களியக்காவிளை ஒற்றாமரம் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் டூரிஸ்ட் வாகனங்கள் இங்கு வரி செலுத்தி உரிய அனுமதி பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் நாகர்கோவிலைச் சேர்ந்த வாடகை வாகன ஓட்டுனர் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்வதற்காக வேனில் வந்தார். சோதனைச்சாவடியில் அவர் 200 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று கேரளா சென்றார்.
கேரள எல்லையான பாறசாலையை தாண்டி குறுங்கட்டி பகுதியில் உள்ள கேரள செக்போஸ்ட்டில் போலீசார் டூரிஸ்ட் வரி செலுத்தியதற்கான ரசீதை கேட்டனர். அவர் தமிழக ரசீதை காட்டியுள்ளார். அப்போது கையில் ரசீதை வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக பேசியதோடு அந்த ரசீதை கிழித்து வேன் ஓட்டுனர் முகத்தில் வீசினார். தமிழகத்தில் வரி செலுத்திய ரசீதை வைத்துக்கொண்டு கேரளாவுக்குள் நுழைய முடியாது எனக் கூறியுள்ளார். வேன் டிரைவர் அவசரமாக விமான நிலையம் செல்லவேண்டும் எனக் மன்றாடியும் ஏற்க மறுத்த போலீசார் அவரை திருப்பி அனுப்பினர்.
ஒற்றாமரம் சுங்கச் சாவடிக்கு திரும்பி வந்த வேன் டிரைவர் அதிகாரிகளிடம் முறையிட்டார். இதுகுறித்த தகவல் அறிந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
மார்த்தாண்டம் ஆர்டிஓ பழனிச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் கேரள போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்மந்தப்பட்ட எஸ்ஐ சார்பில் 2 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தமிழக ஆர்டிஓ மற்றும் டிரைவர் கணேசனிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் அந்த எஸ்ஐ வந்து மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டும் என ஆர்டிஓ பழனிச்சாமி உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பாறசாலை போலீசாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாகன போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. வாகனங்கள் நீண்ட வரிசையில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரள போக்குவரத்து துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு கேரள அதிகாரிகள் உடனடியாக களியக்காவிளை வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வேன் டிரைவர் கூறுகையில், நான் கடந்த வாரமும் இதே போல தமிழக சுங்கச்சாவடியில் வாங்கிய ரசீதை குறுங்கட்டி சோதனை சாவடியில் இருந்த கேரள போலீசார் கிழித்து எறிந்தனர்.
நான் அதை பெரிதுபடுத்தாமல் போலீசாரிடம் கெஞ்சி கூத்தாடி சென்றேன். இது போல் இன்று மீண்டும் செய்துள்ளனர். கேரள போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தமிழக டிரைவர்களிடம் ஒரு தலைபட்சமாகவே நடந்து கொள்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment