Tuesday 6 December 2011

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்று : அரசு புது உத்தரவு

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வு துறை தெரிவித்துள்ளது. இதற்காக, விண்ணப்பத்துடன் வழங்கப்பட்டுள்ள கூடுதல் படிவத்தில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கலர் புகைப்படம் ஒட்டி, தேர்வர்கள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்காமல், தனித்தேர்வராக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அன்றைய தினம் மாலை 5 மணிக்குள், விண்ணப்பம் விநியோகம் செய்த மையத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, தனித்தேர் வர்களுக்கும் புகைப்பட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. இதற்கு வசதியாக, தனித்தேர்வருக்கான விண்ணப்பத்துடன் கூடுதல் படிவம் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த படிவத்தில் தனித்தேர்வர்கள் தனியாக ஒரு கலர் புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். அந்த படிவத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்தில் தேர்வர்களோ, அதிகாரிகளோ கையெழுத் திடத் தேவையில்லை. புகைப்படம், சமீபத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
புகைப்படம் ஒட்டப்பட்ட படிவம், தனித்தேர்வர் விண்ணப்பம் ஆகியவற்றில் ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்கவோ, குண்டூசி குத்தவோ கூடாது. விண்ணப்பங்களை சேர்த்து அனுப்ப ‘ஜெம் கிளிப்’ மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். தேர்வரின் புகைப்படம்தான் படிவத்தில் ஒட்டப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட தேர்வரே, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசுத்தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment