Tuesday, 6 December 2011

சட்டவிரோதம் : ஊழியருக்கு கொடுத்த பணத்தை ஓய்வு பெற்ற பிறகு அரசு கேட்பது

பணியின் போது பெற்ற பணத்தை ஓய்வு பெற்ற பிறகு அரசு கேட்பது நியாயமற்றது , சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த கண்ணம்மாள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
நான் அரசு சுகாதார மையத்தில் மலேரியா ஓழிப்பு களப்பணியாளராக கடந்த 1969ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனது பணியை கடந்த 1978ம் ஆண்டு அரசு நிரந்தரப்படுத்தியது. இதனால் எனக்கு கடந்த 1969ம் ஆண்டில் இருந்து ஊதியம் கொடுக்கப்பட்டது.
கடந்த 32 ஆண்டுகளாக நான் அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய பிறகு கடந்த 2010ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெற்ற பிறகு அரசு எனக்கு ஒரு நோட்டீசு கொடுத்தது. அதில், கடந்த 1978ம் ஆண்டு தான் நான் பணியில் நிரந்தரப்படுத்தப்பட்டேன். ஆனால் கடந்த 1969ம் ஆண்டில் இருந்து பணி நிரந்ததரத்திற்கான ஊதிய பயனடைந்துள்ளது தவறானது, ஆகவே கடந்த 1969ம் ஆண்டில் இருந்து 1978ம் ஆண்டு வரை கூடுதலாக பெற்ற பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறியுள்ளது.
இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே 32 ஆண்டுக்கு பிறகு எனக்கு அரசு நோட்டீசு கொடுத்தது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து, மனுதாரர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசு நோட்டீசு கொடுத்தது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் அரசுக்கு சேர வேண்டிய பணத்தை திரும்ப கேட்க கூடாது கூறியுள்ளது. எனவே 32 ஆண்டுகளுக்கு பிறகு மனுதாரரிடம் பணத்தை திரும்ப அரசு கேட்பது சட்டவிரோமானது.
ஆகவே அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.

No comments:

Post a Comment