இடுக்கியில் போராட்டம்
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக & கேரள எல்லை யில் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் குமுளியில் தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று அங்கு தமிழர்கள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களை துரத்தி துரத்தி ஒரு கும்பல் தாக்கியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்னையில் சுமூக தீர்வு காண, தமிழகம் மற்றும் கேரளா இடையே அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து இருமாநில நீர்வளத் துறை செயலாளர்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை கேரளா வரவேற்கிறது. பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே கேரளா விரும்புகிறது. தமிழகத்துக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பதே கேரளாவின் நிலைப்பாடு. குமுளி மற்றும் கம்பம் மேடு பகுதியில் சில துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது. யாரும் சட்டத்தை கையிலெடுக்க அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.
முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment