Tuesday 20 December 2011

கூடங்குளம் : தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் : வி.எஸ்.அச்சுதானந்தன்

தமிழக மக்களின் அச்சம் நீங்கும் வரை கூடங்குளம் அணுமின்நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது:
கூடங்குளம் அணுமின்நிலையத்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என தமிழக மக்கள் கருதுகின்றனர். தமிழக மக்களின் இந்த நியாயமான அச்சத்தை மத்திய அரசு புரிந்து கொண்டு அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அணுமின்நிலைய விஷயத்தில் தமிழக மக்களின் அச்சம் நீங்கும்வரை அதன் செயல்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்.
அணுமின்நிலையம் தொடர்பாக தமிழக மக்கள் தங்களது அச்சத்தையும், பீதியையும் ஆட்சியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இது தவிர தமிழக அரசும் மத்திய அரசுக்கு எழுத்து மூலமும் தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வைத்து இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அணுமின்நிலையம் தொடர்பான தமிழக மக்களின் போராட்டத்தையும், அச்சத்தையும் ஏளனம் செய்யும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நமது பிரதமரின் இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் மதிப்பளிக்காத வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசின் செய்லபாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment