இயற்கையை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்குகின்றனர் பட்டிவீரன்பட்டி நாசுவிவி பள்ளி மாணவர்கள். தங்களது சொந்த முயற்சியில் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள நர்சரி மூலம் அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி நாசுவிவி பள்ளி தேசிய பசுமைப்படை மாணவர்கள் தாங்கள் மேற்கொண்ட யுக்தியினால் வெறும் மனித ஆற்றல் மூலம் இன்றைக்கு பெரிய நர்சரியையே பள்ளியில் உருவாக்கி உள்ளனர்.
இப்பள்ளி 15 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் மரங்களைக் கொண்டுள்ளது. இவற்றை வைத்தே மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக நர்சரியை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். இந்த மரங்களில் இருந்து விழும் விதைகளை பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் சேகரித்து வைத்துக் கொள்கின்றனர்.
பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒவ் வொரு வீடாகச் சென்று எண்ணெய் பாக்கெட் கவர்களை கீழே போடாமல் எங்களிடமே தாருங்கள் என்று கூறி குறிப்பிட்ட தினங்களில், சேகரித்து வைத்த கவர்களை பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு பகுதி மற்றும் கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் இப்பணிக்கு பொறுப்பேற்று பள்ளிக்கு பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து கொண்டு வருகின்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து மண் எடுத்து நிரப்பி பக்குவப்படுத்தப்பட் விதைகளை அதில் ஊன்றி வளரச் செய்கின்றனர்.
ஆரம்பத்தில் 100 கன்றுகளுடன் ஆரம்பித்த நர்சரியில் தற்போது 10 ஆயிரம் மரக்கன்றுகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. மேலும் 2 லட்சம் விதைகளும் உள்ளன. இதில் மயில்கொன்றை, வாகை உள்ளிட்ட விதைகள் 5 ஆண்டுகளானாலும் உழுத்துப்போகாமல் கெட்டித்தன்மையுடன் முளைக்கும் திறனுடன் இருக்கும்.
இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் திண்டுக்கல் மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இலவசமாக அனுப்பப்படுகிறது. மரக்கன்றுகள் நடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளதா?, நீர் மற்றும் பராமரிக்கும் திறன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தே இவை வழங்கப்படுகிறது.
தற்போது மாவட்டத்தில் எங்கு மரக்கன்றுகள் தேவைப்பட்டாலும் உடன் பட்டிவீரன் பட்டி பள்ளியைத்தான் பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் நாடி வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் கூறுகையில், மரம் வளர்ப்பினால் பல்வேறு பயன்கள் இருந்தாலும் இதில் பிளாஸ்டிக் ஒழிப்பும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இத்திட்டம் மூலம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிளாஸ்டிக் பையை வீதியில் எறியும் பழக்கத்தை மாற்றியுள்ளோம்.
இவற்றில் மரக்கன்று நடுவதின் மூலம் அதன் வீரியம் வெகுவாய் குறைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் அதில் உள்ள பாலிபுரோபின், நச்சுவாயுவாக மாறி சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், மண்வளத்தையும் வெகுவாய் பாதிக்கும். தற்போது இதுபோன்ற அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. 12 அடி உயரம் வளர்ந்த கன்றுகள் கூட எங்களிடம் தயார் நிலையில் உள்ளது. அழிந்து வரும் மரங்களான அரசமரம், ஆலமரம், பூவரசு உள்ளிட்டவற்றை முக்கியத்துவம் கொடுத்து அதிகம் விளைவித்து வருகிறோம். இந்த முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு பள்ளியுமே ஒரு நர்சரியாக மாற முடியும் என்றார்.
No comments:
Post a Comment