Friday 6 January 2012

சாத்தூர் : பால் : பரபரப்பை ஏற்படுத்திய வேப்பமரம்

சாத்தூர் அருகே வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து அதிசயித்து செல்கின்றனர். பரபரப்பை ஏற்படுத்திய வேப்பமரம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது குமாரரெட்டியாபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முன்புறம் உள்ள ஒரு வேப்ப மரத்தில் திடீரென பால் வடியத் துவங்கியது. இதனை பொதுமக்கள் வந்து அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த தகவல் அக்கம், பக்கத்தில் உள்ள ஊர்களுக்கும் பரவியது.
சாத்தூர், கத்தாழம்பட்டி, வாழவந்தாள்புரம், அம்மாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பால் வடியும் அதிசய வேப்பமரத்தை காண வந்தனர். மரத்திலிருந்து வடிந்த பால் மரத்தை சுற்றிலும் தேங்கி நின்றது. பொதுமக்கள் சிலர் வேப்பமரத்திற்கு மஞ்சள் நீரூற்றி அபிஷேகம் செய்து, சிவப்பு சேலை சுற்றி அம்மனாக வழிபடத் துவங்கினர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் பால்வடியும் வேப்பமரத்தை கண்டு வணங்கினர்.
இதுகுறித்து கோயில் பூசாரி சீனிவாசன் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக, இதே வேப்பமரத்தில் பால் வடிந்தது, அப்போதும் ஊர்மக்கள் கூடி வேப்பமரத்தை அம்மனாக நினைத்து வழிபட்டனர். இன்று மீண்டும் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் மீண்டும் அம்மன் அவதாரம் எடுத்துள்ளதாக கருதி பொதுமக்கள் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர், என்றார்.
இதுகுறித்து தனியார் கல்லூரி தாவரவியல்துறை பேராசிரியர் தங்கப்பாண்டியன் கூறுகையில், மரங்களில் பால்வடிவது என்பது ஒரு சாதாரண விசயம். லேடக்ஸ் வகையை சேர்ந்த மரங்களில் குறிப்பிட்ட காலங்களில் ஒருவித திரவம் வழியத் துவங்கும். வெள்ளெருக்கு, பால் அட்டங்குலை மற்றும் வேப்பமரங்களில் லேடக்ஸ் வகைகளில் மட்டுமே குறிப்பிட்ட காலங்களில் இதுபோல் பால் போன்ற திரவம் வடிவது இயற்கையானது தான்.
இதையே கிராம மக்கள் வேப்பமரத்தில் பால் வடிந்தவுடன் அம்மன் அருள் என்று வணங்க ஆரம்பித்து விடுகின்றனர், என் றார்.

No comments:

Post a Comment