குழந்தை பெற முடியாத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகிச்சை முறை பிரபலமானது. இதையே உல்ட்டாவாக்கி, விந்தணு எண்ணிக்கையை குறைக்கும் கருத்தடை முறை குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடந்து வருகிறது.
கருத்தடைக்கு ஆபரேஷன், ஆணுறை, மாத்திரைகள் என பல வழிகள் உள்ளன. இதை மேலும் எளிமையாக்குவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் சுருடா தலைமையில் சமீபத்தில் இதுபற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதுபற்றி அவர் கூறியதாவது:
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக, வீரியமாக இருந்தால்தான் குழந்தை பெற முடியும். குழந்தை பெற முடியாத ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மாறாக, விந்தணு எண்ணிக்கையை குறைத்து கருத்தடை முறையாக பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு நடத்தினோம்.
ஆண் சுண்டெலிகளின் விந்தணு எண்ணிக்கையை அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை மூலம் குறைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எலியின் விதை மீது 3 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அல்ட்ரா சவுண்ட் அலையை செலுத்தி, விந்தணுவை உருவாக்கக் கூடிய ஜெர்ம் செல் அழிக்கப்பட்டது. ஆனால், சவுண்ட் அலை செலுத்தியதில் எலியின் விதை சற்று சூடாகியிருந்தது. மனிதர்களுக்கும் இதை கருத்தடை முறையாக பயன்படுத்தலாம்.
இது 40 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்துள்ளது. அப்போது, பிராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு, விதைகளை அகற்ற வேண்டிய நிலைமையில் இருந்த நோயாளிகள் சிலருக்கு அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களது ஜெர்ம் செல் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் இருந்தது. வலி இல்லை என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த சிகிச்சை முறை சிக்கனமானது, நம்பகமானது. விருப்பப்பட்டால் மீண்டும் விந்தணு எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளவும் முடியும். அடிக்கடி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. பக்கவிளைவுகள் குறைவு. இறுதிகட்ட ஆராய்ச்சி மற்றும் முறைப்படியான ஒப்புதலுக்கு பிறகு, இது நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு ஜேம்ஸ் கூறினார். (Tamil Murasu)
No comments:
Post a Comment