Tuesday 31 January 2012

கைதியின் குடும்பத்தை காக்க சட்டீஸ்கர் அரசு புதுமை திட்டம்

கைதியின் சொத்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தை பாதுகாக்க சட்டீஸ்கர் அரசு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
சிறை செல்லும் கைதிகள் அனுபவிக்கும் கொடுமையைவிட அவர்களது குடும்பத்தினர் அனுபவிக்கும் கொடுமை மிகவும் பயங்கரமானது. வருமானம் இல்லாமல் நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்கள் அதிகம். கைதியின் குழந்தைகள் பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பாதியிலேயே தங்கள் படிப்பை நிறுத்தும் நிலை உள்ளது. இதை தடுக்க, சட்டீஸ்கர் அரசு புதுமையான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, சிறைச்சாலைகளில், சட்ட உதவி மையங்கள் தொடங்கப்படும். அதில், கைதிகள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் சட்ட உதவி பெறலாம். சொத்து அபகரிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். அதுபோல், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க சட்ட உதவி மையம் நடவடிக்கை எடுக்கும்.
இது குறித்து மாநில சட்ட உதவி ஆணைய குழு தலைவரான சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதி குத்சி கூறுகையில், ‘‘குடும்பத்தில் ஒருவர் சிறைக்கு சென்றுவிட்டால் மற்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது. குழந்தைகளின் படிப்பு பாதிக்க கூடாது. சொத்து அபகரிக்கப்பட்டால் புகார் செய்யலாம். அவர்களுக்கு, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைதிகளுக்கு ஜாமீன், பரோல் பெற்றுத்தரவும் உதவி செய்யப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment