ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்கள் மீதான மதிப்பு, மரியாதையை முடிவு செய்கிறது. ஒரு சிலர் இருக்கிறார்கள், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பேசுவார்கள். எதிரில் இருக்கும் எல்லோருக்குமே எரிச்சல் ஏற்படும்.
இன்னும் சிலர், எல்லோருடனும் சண்டை போடுவார்கள். சின்ன விஷயத்துக்குகூட தரக் குறைவாக பேசி தகராறு செய்வார்கள். எந்த பிரச்னைக்கும் போகாதவர்களையும் தெருவுக்கு இழுத்து சண்டை போடுவார்கள். இப்படிப்பட்ட ஒருவரால், கடுப்பாகிப் போன பக்கத்து வீட்டுக்காரர், குடிபோதையில் இருந்தபோது கொலைகாரனாகி விட்டார்.
சென்னையை அடுத்த கொடுங்கையூரை சேர்ந்தவர் முனியசாமி. ஆட்டோ டிரைவர். குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தினமும் போதையில் வரும் முனியசாமி, எதிரே வசிக்கும் பரந்தாமன் வீட்டின் வாசலில் ஆட்டோவை நிறுத்துவார். அங்கேயே படுத்துவிடுவார். இது பற்றி யாராவது கேட்டால் தரக்குறைவாக பேசுவார். வழக்கம்போல், கடந்த 20ம் தேதி இரவும் அளவுக்கு அதிகமான போதையில் முனியசாமி வந்தார். பரந்தாமன் வீட்டு முன்பு நின்று தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் பரந்தாமனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் நண்பர்கள் சரவணன், அண்ணாதுரை மது அருந்த வீட்டுக்கு வந்தனர். அப்போது முனியசாமியை பற்றி கூறியிருக்கிறார். முனியசாமியை தீர்த்து கட்டிவிடலாம் என முடிவு செய்த 3 பேரும் உருட்டுக்கட்டை, அரிவாளுடன் சென்று ஆட்டோவில் படுத்திருந்த முனியசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். தப்பி ஓட முயன்றபோது, அரிவாளால் வெட்டிவிட்டி, அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில்போலீசில் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் பரந்தாமன் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த சரவணன், அண்ணாதுரை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
என்னதான் படித்திருந்தாலும், யார் சண்டைக்கும் போகக் கூடாது என நினைத்தாலும் அவர்களையும் விடாமல் வம்புக்கு இழுத்து தொந்தரவு செய்தால், கோபம் வரத்தானே செய்யும். இதுபோன்ற மோசமானவர்கள் நல்லவர்களையும் கெட்டவர்களாக, கொலைகாரர்களாக மாற்றி விடுகிறார்கள். பிரச்னை வேண்டாம் என பொறுத்துப் போனால் சமூகம் கோழை என முத்திரை குத்தி விடுகிறது. அதற்கு பயந்து பொங்கி எழும்போதுதான் தேவையில்லாத பிரச்னைகள் வருகிறது. பல நேரங்களில் பிடிக்காத பல விஷயங்களை கண்டும் காணாதது போல் இருப்பதுதான் நல்லது. (Tamil Murasu)
No comments:
Post a Comment