தமிழகத்தில் 13 மத்திய சிறைகளில் விரைவில் 54 பொது தொலைபேசிகள்
தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் 54 பொது தொலைபேசிகள் வைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
புழல், திருச்சி, மதுரை, கோவை, வேலூர், பாளை உள்பட 9 ஆண்கள் மத்திய சிறையும் புழல், வேலூர், திருச்சியில் பெண்கள் மத்திய சிறையும் உள்ளன. இந்த சிறைகளில் தூக்குதண்டனை கைதிகளும் ஆயுள் தண்டனை கைதிகளும் உள்ளனர். மேலும், பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறை அதிகாரிகளின் முன் அனுமதியுடன் உறவினர்களை பார்த்து பேசி வருகின்றனர்.
இதற்கிடையில், சிறைக்குள் செல்போன் கொண்டு செல்லுதல், சிம் கார்டு கடத்துதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பது தொடர்கதையாக¤ வருகிறது. இந்நிலையில் கைதிகளுக்கு செல்போன் மற்றும் சிம்கார்டுகள் கடத்தி செல்வதை தடுக்கவும் செல்போன் மூலம் பேசுவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உறவினர்களுடன் பேசாமலும், பார்க்காமலும் இருக்கும் பல கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சிறைச்சாலைகளில் வேறு சில அசம்பாவித சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, கைதிகளின் மன இறுக்கத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு பொது தொலைபேசி வைக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று, தமிழகத்தில் 13 மத்திய சிறைகளில் 54 பொதுதொலைபேசிகள் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தொலைபேசியில் சிறைக்கைதிகள் பணம் செலுத்தி பேச வேண்டும். ஒவ்வொரு தொலைபேசி பூத்திலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அவர்கள் பேசுவது ரெக்கார்டு செய்யப்படும். தொலைபேசிகள் அமைப்பதற்கான டெண்டரை எல்காட் நிறுவனம் விட்டுள்ளது. டெண்டர் சமர்பிக்க வரும் 20ம் தேதி கடைசி நாள். அன்று மாலை 5.15 மணிக்கு டெண்டர் திறக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் 45 நாளில் தொலைபேசி பூத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது தொலைபேசி வைக்கப்படும் சிறைகள் மற்றும் தொலைபேசி எண்ணிக்கை விவரம்: சென்னை புழல் மத்திய சிறை 1ல்&2, புழல் சிறை 2ல்&6, வேலூர்&7, கடலூர்&3, திருச்சி 8, சேலம்&5, கோவை& 8, மதுரை&5, பாளையங்கோட்டை&6, புழல், வேலூர், திருச்சி பெண்கள் மத்திய சிறையில் தலா 1, புதுக்கோட்டை இளங்குற்றவாளிகள் பள்ளியில் ஒரு பொது தொலைபேசி என்று மொத்தம் 54 பொது தொலைபேசிகள் வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment