81 லட்சம் பேருக்கு இலவச காலணி வழங்க ஜெ. உத்தரவு
அரசு பள்ளிகளில் 1 முதல் 8&ம் வகுப்பு வரை படிக்கும் 46.85 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டில் 4 செட் இலவச சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 6&ம் வகுப்புக்கு மேல் மாணவர்களுக்கு பேன்ட்டும், மாணவிகளுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படுகிறது. மேலும் 10&ம் வகுப்பு வரை படிக்கும் 81 லட்சம் பேருக்கு இலவச காலணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2012 & 13-ம் கல்வியாண்டு முதல் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8&ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு செட் சீருடையுடன் கூடுதலாக இரண்டு செட் சீருடை சேர்த்து மொத்தம் நான்கு செட் சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதில் 6&ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதிலாக முழுகால் சட்டையும் (பேன்ட்), மாணவிகளுக்கு பாவாடை தாவணிக்கு பதிலாக சல்வார் கமீசும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 78 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக ஒரு ஜோடி செருப்பு வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 5-ம் வகுப்பு வரை 95 ரூபாய் மதிப்பிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 127 ரூபாய் மதிப்பிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு 142 ரூபாய் மதிப்பிலும் இந்த ஆண்டே காலணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அரசுக்கு 94 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ மாணவிகள் பயன்பெறுவர்.
மாணவ, மாணவியரிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தக பை, ஜியாமெட்ரி பாக்ஸ், வண்ண பென்சில்கள், மேப் ஆகியவற்றை வரும் கல்வியாண்டு முதல் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். இத்திட்டத்துக்காக அரசுக்கு 2012&13ம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத் தொகையும் உயர்த்தப்படுகிறது. மாவட்ட அளவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கான முதல் பரிசு 1500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டாம் பரிசை ரூ.2 ஆயிரமாகவும், மூன்றாம் பரிசை ரூ.1000 ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், இரண்டாம் பரிசு 4 ஆயிரமாகவும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. (Tamil Murasu)
No comments:
Post a Comment