மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவோ, கடுமையான தண்டனை அளிக்கவோ கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை யில் உள்ள பழமையான ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், ஆசிரியை உமா மகேஸ்வரியை 9ம் வகுப்பு மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் வகுப்பு அறையிலேயே குத்திக் கொலை செய்தான். இந்த சம்பவம், தனியார் பள்ளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆசிரியர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர், மாணவர் இடையே பிரச்னை ஏற்படாதபடி நடவடிக்கை எடுக் கவும், கண்காணிக்கவும் பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, நேற்று முன்தினம் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
பள்ளிகளில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்செல்வி கூறியதாவது:
மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தக் கூடாது. கடுமையான தண்டனைகள் வழங்கக கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள், ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திலும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், சரியாக படிக்காத மாணவர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
பாரிமுனை பள்ளியில் நடந்த கொலை சம்பவம் எதிர்பாராத ஒன்று. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். இதன் தொடர்ச்சியாக அரசும் நடவடிக்கை எடுக்க உள்ளது.
இவ்வாறு செந்தமிழ்செல்வி தெரிவித்தார்.
No comments:
Post a Comment