Saturday 11 February 2012

புதுவித வைரஸ் நோய் : டாக்டர்கள் எச்சரிக்கை

பனியும் வெயிலும் மாறி மாறி அட்டாக் : பொதுமக்கள் பீதி
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கடும் பனி வாட்டி வதைத்தது. இதனால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலையில் குறித்த நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
பனியின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. பனி லேசாக இருந்த போதிலும், காலை 6 மணிக்கே வெயிலும் சேர்ந்து கொள்கிறது. இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் பொதுமக்களுக்கு உடம்பில் ஒரு வித வலி, கை & கால் உளைச்சல், சோர்வு ஏற்பட்டு வருகிறது. தலைவலி மற்றும் லேசான காய்ச்சலுடனே ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கின்றனர். அடித்துப் போட்டாற் போல் படுக்கையில் புரள்வதால், சுறுசுறுப்பாக எழ முடிவதில்லை.
இதனால், குடும்ப பெண்கள் காலையில் எழுந்து வீட்டு வேலை களை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடம்பு வலியால் அலுவலகங்களுக்கு செல்வோர் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதியோர், குழந்தைகளிடம் பாதிப்பு அதிகமாக தெரிகிறது. இருமல், சளி, காய்ச்சலால் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வாக்கிங் செல்வோர், டூவீலர் ஓட்டுபவர்களின் கால் பாதங்களில் ஒரு விதமான வலி ஏற்படுகிறது.
இதுபற்றி சென்னை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கனகசபையிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
பருவநிலை மாற்றம், வைரஸ் நோயினால் இதுபோன்ற உடல் வலி ஏற்பட்டு வருகிறது. வைரஸ் நோய் பரவாமல் இருக்க காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும். சுகாதாரம் இல்லாத கடைகளில் சாப்பிட கூடாது. கழிவறைக்கு சென்ற பின்னர் இரண்டு கையையும் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். கையை சுத்தமாக கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
காய்கறி, சத்தான பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம். இரவு பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் காதுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்வகையில் மப்ளரோ அல்லது ஹெல்மெட்டோ அணிந்து செல்ல வேண்டும். பஸ்களில் செல்வோர் ஜன்னல் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். உடம்பில் வலி ஏற்பட்டால் ‘அல்ட்ரா செட்’ மாத்திரையை பாதி அளவுக்கு சாப்பிடலாம். உடம்பில் வலி அதிகமாக காணப்பட்டால் முழு மாத்திரையை காலை, மாலை இரண்டு வேளை சாப்பிடலாம். அதுவும் டாக்டரிடம் ஆலோசனை பெற்றுத்தான் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment