‘‘தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத் தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன்’’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றம் இல்லை. கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதுபோல், தமிழகத்திலும் கண்டிப்பாக தமிழில் படிக்க வேண்டும். உறுப்பினர் குறிப்பிட்ட பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் இல்லை என்றால் அந்த குறையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
தானே புயல் நிவாரண நிதிக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு 5,000 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், 500 கோடியை மத்திய அரசு தந்ததாகவும் இது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்றும் இங்கே உறுப்பினர் குறிப்பிட்டார். 500 கோடி கூட புயல் தாக்கப்பட்ட உடனே வழங்கிவிடவில்லை.
தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து வற்புறுத்தி, திரும்ப, திரும்ப நிவாரண உதவி கேட்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நிதியும் வரவில்லை.
ஆனால், தமிழக அரசு சும்மா இருந்துவிடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 850 கோடி ரூபாய் வழங்கி பணிகளை தொடங்கிவிட்டது. தமிழகத்தில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் புயல் தாக்கிய மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என்று விளம்பரம் செய்தது. இதை பார்த்த மத்திய அரசு வெட்கப்பட்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை. அன்று மாலையே 500 கோடி ரூபாயை தமிழகத்துக்கு அறிவித்தது.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, அவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட ஒரே வழி கச்சத்தீவை மீட்பதுதான். இது சம்பந்தமாக, அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். இந்த வழக்கை வலுவூட்டும் வகையில் தமிழக வருவாய்த் துறையும் தன்னை இணைத்து கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கச்சத்தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன்.
சட்டமன்ற உறுப்பினர்களாகிய உங்கள் 5 பேரையும் குறை கூறவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்? தமிழக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதே தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியில் எம்பிக்களாக, அமைச்சர்களாக இருக்கும் சிதம்பரம் போன்றவர்கள் பாராமுகமாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்கிறேன்.
No comments:
Post a Comment