தேங்காப்பட்டணம் அருகே முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் தொடர் கடலரிப் பால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி கடற்கரை பகுதியில் முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை, இனயம் போன்ற கிராமங்கள் உள்ளன. கடந்த காலங்களில் தொடர் கடல் சீற்றத்தால் இப்பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டன. ஆனால் முள்ளூர்துறை கிராமத்தில் உள்ள அரையன்தோப்பு பகுதியில் சுமார் 100 மீட்டர் பகுதியில் எதிர்ப்பு காரணமாக தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவில்லை.
இதனால் கடந்த ஆண்டு பல முறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அந்த பகுதி சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களே இணைந்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் அந்த பகுதியில் தொடர் கடலரிப்பு ஏற்படுவதால் விரைவில் சாலை துண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்ற காலங்களில் அந்த பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளும் கடல் நீர் புகும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த சாலை துண்டிக்கப்பட்டால் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எனவே அறையன்தோப்பில் கடலரிப்பு தடுப்பு சுவர் இல்லாத பகுதியில் உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (Dinakaran)
No comments:
Post a Comment