Monday, 16 April 2012

ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் : மாமனார், மாமியார் தர உத்தரவு

விதவை மருமகளுக்கு மாமனாரும், மாமியாரும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் புதுமையான தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இளம் விதவை ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,‘‘கடந்த 2008ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்துமே மாமியார் கொடுமை ஆரம்பித்துவிட்டது. வேறு ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி என்னை கொடுமைபடுத்த ஆரம்பித்தார். என் கணவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையே எங்களுக்கு மகன் பிறந்தான். ஆனாலும், மாமியார் கொடுமை குறையவில்லை. இந்த நிலையில், என் கணவர் திடீரென இறந்துவிட்டார்.
இதற்கான சடங்குகளை செய்ய கைக்குழந்தையான என் மகனை அழைத்துக் கொண்டு என் தாய் வீட்டுக்கு சென்றேன். மீண்டும் என்னை வீட்டுக்கு சேர்க்க மாமனாரும், மாமியாரும் மறுத்துவிட்டனர். என் கணவர் பெயரில் பல வங்கிகளில் கணக்கு இருந்தது. மேலும் ஏராளமான சொத்துகளும் இருந்தது. வங்கி கணக்குகளில் இருந்த பணத்தை தன் கணக்குக்கு மாமனார் மாற்றிக் கொண்டார். இதோடு, சொத்துக்களையும் விற்றுவிட்டார். நானும், என் மகனும் என் தாய் வீட்டில் வாழ்ந்துவருகிறோம். எனவே, எனக்கு ஜீவனாம்சம் தர என் மாமனார், மாமியாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை மாஜிஸ்திரேட் ரச்னா திவாரி லக்கன்பால் விசாரித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறியிருப்பதாவது:
மகன் இறந்துபோன 2 நாளில் அவனது வங்கி கணக்கில் இருந்து அவசரம் அவசரமாக பணத்தை எடுத்துள்ளனர். ஆனால், மருமகளுக்கும், பேரக்குழந்தையில் ஒரு பைசா கூட தரவில்லை. வழக்கமாக மனைவிக்கு கணவன்தான் ஜீவனாம்சம் தர வேண்டும். ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை கணவன் இல்லை. இதனால், ரயில்வேயில் இன்ஜினீயராக வேலை பார்க்கும் மாமனாரும், மாமியாரும் தங்கள் மருமகளுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. Will this order be considered valid even if the girl marries another man???

    ReplyDelete