Monday, 16 April 2012

அட அப்படி போடு!!! புதுவை முன்னாள் அமைச்சர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை

puducherry-minister-kalyana-sundaram-10th-exam-fraudபுதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் மீதான 10ம் வகுப்பு தேர்வு குறித்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. 29-09-2011 ல் நடந்த அறிவியல் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த்
ஆகியோர் மீது அப்போதையை முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி புகார் செய்தார். அதன் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கியது.

இதன் தொடர்ச்சியாக, கல்யாணசுந்தரத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஆசிரியர் ஆதவன், உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

உதவியாளர் ரஜினிகாந்திடம் முதலில் விசாரணை நடந்தது. தலைமறைவான கல்யாணசுந்தரம், ஆசிரியர் ஆதவன் ஆகியோர் தனித்தனியாக நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் பெற்றனர். நீதிமன்ற உத்தரவுபடி இருவரிடம் தனித்தனியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரத்தின் மாதிரி கையெழுத்து பெறப்பட் டது. அந்த கையெழுத்தும் 10ம் வகுப்பு அறிவியல் விடைத்தாளில் உள்ள கையெழுத்தும் ஒன்று தானா? என அறிவதற்காக சென்னை தடயவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தடயவியல் ஆய்வின் முடிவில் இரண்டு கையெழுத்துகளும் ஒன்றாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய அறிக்கை, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வு மையம் மூலம் திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே அறிவியல் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறவில்லை என்று உறுதியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment