Thursday 26 April 2012

இன்று முதல் 10 - ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வினியோகம்

பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்று முதல் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவசப் பாடபுத்தகங்களை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு அந்த மாவட்டங்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அச்சகங்களில் இருந்தே நேரடியாக செல்லும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த புத்தகங்களை ஒவ்வொரு பள்ளிக்கும் இன்று முதல் அனுப்புவார்கள். 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில்(தனியார் பள்ளிகளில்) படிக்கும் மாணவர்களுக்காக விற்பனை செய் யும் பாடப்புத்தகங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக தலைமை அலுவலகத்திலும், 22 வட்டார அலுவலகங்களிலும் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் முதல்வர்கள் இன்று முதல் அந்தந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்களுக்கான தொகையை வங்கி வரைவோலையாக செலுத்தி புத்தகங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
சென்னையில் அதிக அளவில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளதால் தாமதம் இல்லாமல் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் பாடநூல் கிடங்குகள் செயல்படும். எனவே பாடநூல் கிடங்குகளில் இருந்து ஏதாவது ஒரு பள்ளிக்கு புத்தகங்கள் எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து பிரித்து வழங்கப்படும்.
புத்தகங்களை தனித்தனியாகவோ, செட்டாகவோ பெற்றுக் கொள்ளலாம். மெட்ரிக் பள்ளிகளுக்கான புத்தக விலையில் 5 சதவீத கழிவு போக நிகரதொகையை செலுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் http://textbookcorp.tn.nic.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment