இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்கவும், புகார் தெரிவிக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையம் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வி வழங்குவதற்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற அரசின் முடிவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே முழுமையாக செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மாநில அளவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு உத்தரவையும் கடந்த நவம்பர் மாதமே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு (2012-13) முதல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முழு அளவில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் கட்டாயம் 25 சதவீத இடங்கள் ஏழை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்பதை 100 சதவீதம் செயல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி விடும். அதேபோல் இந்தாண்டும் முன் கூட்டியே மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை பல பள்ளிகள் மேற்கொண்டன. ஆனால் இதற்கு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் மூலம் தடை விதித்தபோதும் சில பள்ளிகள் கண்டுகொள்ளவில்லை.
கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளை மீறி முன் கூட்டியே மாணவர்களை சேர்த்துள்ளனர். அதில் சில மாணவர்களை நன்கொடை மற்றும் உரிய கட்டணங்களை வாங்கி சேர்த்துக்கொண்டு ஏழைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு பட்டியலில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதும் கல்வித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகள் குறித்த விவரங்கள் மாவட்ட கல்வித்துறை மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குநரகத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது. விதி மீறலில் ஈடுபட்ட பள்ளிகளில் விரைவில் நேரடியாக ஆய்வு செய்து அப்பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற பிரச்னைகள் எழுந்திருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குறைபாடுகளை களைவதற்கும், கல்வி உரிமை மறுக்கப்படுவதை தடுக்கவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்துவது குறித்தும் பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை வழங்குவதில் எந்த நெருக்கடிகளுக்கும் இடம் தரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தற்போது கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (ஸ்டேட் கவுன்சில் பார் எஜூகேசன், ரிசர்ச் அண்ட் டிரெய்னிங் சென்டர்) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இணை இயக்குநர் அந்தஸ்தில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மையத்தின் தொலைபேசி எண் 044&28278742, 28211391. இந்த மையத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
மாநில அளவில் ஒரு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டிருப்பது போல், மாவட்ட அளவிலும் முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டில் அல்லது மாவட்ட முதன்மை தொடக்க கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் ஒரு கண்காணிப்பு மையம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மையத்திற்கு தொலைபேசி மூலமோ அல்லது எழுத்து மூலமோ வரும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான விண்ணப்ப வினியோகம் மே மாதத்தில் தான் துவக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே, இடஒதுக்கீடு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் தப்ப முடியாது.
இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment