அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்து கொள்வது எப்படி என்பது குறித்த முழுவிவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 10,718 இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி தண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் பணி இடங்கள், குரூப் 8-ல் காலியாக உள்ள 75 இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலை பணியாளர் என 10,793 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது.
இந்த பதவிகளுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மே 28-ம் தேதி கடைசி நாள் என்றும், எழுத்துத் தேர்வு ஜூலை 7 -ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்ய விரும்புவோர், தங்களது விவரங்களை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in , www.tnpscexams.net - ல் பதிவேற்றம் செய்து நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிரந்தர பதிவு செய்வோருக்கு "ஏ" பிரிவில் சொந்த விவரம், "பி" பிரிவில் சான்றிதழ் விவரம், "சி" பிரிவில் கல்வித் தகுதி விவரம், "டி" பிரிவில் புகைப்படம், கையொப்பம் விவரம், "இ" பிரிவில் உறுதிமொழி போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும்.
இவற்றை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். விவரத்தை பதிவு செய்தவுடன் விண்ணப்பதார ருக்கு தனித்துவ அடையாள அட்டை எண், பாஸ்வேர்ட் வழங்கப்பட்டு, எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
புதிய அறிவிப்புகள் வெளியாகும்போது அதுகுறித்த தகவல்கள் எஸ்எம்எஸ், மின் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். ரூ 50 பதிவுக் கட்டணம் செலுத்தி இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவு 5 ஆண்டுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
பதிவு கட்டணத்தை மாநிலத்தில் உள்ள 500 அஞ்சலகம், அனைத்து இந்தியன் வங்கி கிளை, நெட் பேங்கிக், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இதில் ஏதேனும் ஒரு முறையில் செலுத்தலாம். பதிவு கட்டணம் செலுத்தினால் மட்டுமே பதிவு முறையானதாக கருதப்படும். நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர் 20 முதல் 50 கிலோபைட் அளவுள்ள சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோ, 10 முதல் 20 கிலோபைட் அளவுள்ள ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம், பல்வேறு சான்றிதழ்கள் குறித்த விவரங்கள், தக்க மின் அஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment