முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு பேரவை கூடியது. சிறப்பு கூட்டத்தை தொடங்கி வைத்து உம்மன்சாண்டி பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தீர ஒரே வழி, புதிய அணை கட்டுவதுதான். இந்த விஷயத்தில் தமிழ்நாடு உடனான நல்லுறவு எந்த விதத்திலும் பாதிக்காது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும் என இந்த பேரவை உறுதி அளிக்கிறது. அதே நேரம், கேரள மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது” என்றார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன் பேசுகையில், “காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வரும்போதுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை பூதாகரமாகிறது. கடந்த இடது முன்னணி ஆட்சியின்போது, இந்த பிரச்னை திறமையாக கையாளப்பட்டது. தற்போது, காங்கிரஸ் அரசு மெத்தனம் காட்டுகிறது. மத்திய அரசும் இதே போக்கைதான் கையாள்கிறது” என்றார்.
நிதித்துறை அமைச்சர் மாணி பேசுகையில், “புதிய அணைக்கான பூமி பூஜையை உடனடியாக தொடங்க வேண்டும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பிஜிமோள் பேசியபோது, “முல்லை பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்றும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் உம்மன்சாண்டி கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேறியது.
No comments:
Post a Comment