காதல் : கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து பலியானது ஏன்?
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நேற்று முன் தினம் காலையில் மூதாட்டி, இளம்பெண் ஆகியோர் அடுத்தடுத்து ரயில்களில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பன போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக தெரிய வில்லை. இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதால் தாய், மகளாக இருக்குமா? என்ற சந்தேகமும் வந்தது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ சுலோக்சனா, பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் நேற்று மாலை, நாகர்கோவில் ரயில்வே போலீசாரிடம் வந்து, தனது மகள் செல்வமஞ்சுவை இரு நாட்களாக காண வில்லை என்றும், தண்டவாளத்தில் இறந்த கிடந்த இளம்பெண்ணின் உடலை பார்க்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கிடையே இளம்பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் மற்றும் உடைகளை காட்டிய போதே, வளர்மதி அழ தொடங்கினார். பிறகு அவரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்த இளம்பெண்ணின் உடலை காட்டிய போது, இறந்து கிடந்தது தனது மகள் செல்வ மஞ்சு தான் என்பதை உறுதி செய்தார். அவர் ஏன்? ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தற்கொலை செய்து கொண்ட செல்வ மஞ்சு, நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், இவரது தூரத்து உறவினரான வாலிபர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இந்த வாலிபர் ஒரு வாகன புரோக்கர். இரு சக்கர வாகனங்களை கை மாற்றி விடும் தொழில் செய்து வருகிறார். மயிலாடி பகுதியை சேர்ந்தவர். இந்த வாலிபர் ஏற்கனவே 2 திருமணங்கள் செய்தவர். முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று விட்டார். பின்னர் 2 &வதாக வேறொரு பெண்ணை வாலிபர் திருமணம் செய்தார். அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயானவர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர் ஆவார். தற்போது வாலிபருடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையால் மீண்டும் கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் தான் செல்வ மஞ்சுவுடனான பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. முதலில் இந்த வாலிபருக்கு திருமணமாகி விட்டது என்பது செல்வ மஞ்சுவுக்கு தெரியாது. அவரும் தீவிரமாக காதலிக்க தொடங்கினார். இந்த நிலையில் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசை காட்டி, கடந்த 19.12.2011 அன்று செல்வ மஞ்சுவை மதுரைக்கு அழைத்து சென்றார். அங்கு ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். முதலில் இவர்கள் இருவரும் மதுரைக்கு சென்றது யாருக்கும் தெரியாது. பின்னர் இரு குடும்பத்தாருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரின், 2&வது மனைவி தனது குழந்தைகளோடு மதுரைக்கு சென்று விட்டார். அங்கு செல்வ மஞ்சுவும், தனது கணவரும் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று செல்வ மஞ்சுவிடம் கதறி அழுதார். அதன் பின்னரே அந்த வாலிபரின் முழு சுயரூபங்கள் செல்வ மஞ்சுவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் மனம் உடைந்தார். தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதே என நினைத்து கதறி அழுதார்.
இதற்கிடையே அந்த வாலிபரும் மனைவி, குழந்தைகளோடு செல்வதாக கூறினார். வேறு வழியின்றி கடந்த 28ம்தேதி, செல்வமஞ்சுவும் அவர்களோடு நாகர்கோவில் வந்துள்ளார். வீட்டுக்கு சென்றால் மானம் போய் விடுமே என நினைத்து நாகர்கோவில் பார்வதிபுரம் சென்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காதல், காதலனை நம்பி ஒரு இளம்பெண்ணின் உயிர் பழியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த விவகாரத்தில் காதலிப்பதாக ஏமாற்றி, செல்வமஞ்சுவை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த வாலிபரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment