Monday 30 January 2012

ரயில்களில் கட்டணம் 12% வரை உயர்த்தப்படலாம்


ரயில்களில் பயணிகள் கட்டணம் கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 12% வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.
ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ரயில்வே வாரியம் வரைவு அறிக்கை தயாரித்து வருகிறது. இதில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை கட்டாயம் உயர்த்த வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. இது பற்றி, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 8 ஆண்டுகளாக ரயிலில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்தும், பயணிகள் கட்டணத்தை உயர்த்தாததால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.16,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.20,000 கோடி பட்ஜெட் நிதியுதவி கிடைத்தது. இந்த ஆண்டில் ரூ. 40,000 கோடி தேவை என வலியுறுத்தப்படுகிறது. எனினும், மத்திய அரசின் நிதி உதவி இந்த ஆண்டு குறைவாகவே கிடைக்கும் என தெரிகிறது. இதனால், வருவாயை பெருக்க கட்டணங்களை உயர்த்துமாறு நிதியமைச்சகமும், மத்திய திட்டக் குழுவும் அறிவுறுத்தியுள்ளன.
எனவே, பயணிகள் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது. ஏ.சி. வகுப்புகளுக்கு கட்டண உயர்வு அதிகமாக இருக்கும். 2ம் வகுப்புக்கு சராசரியாக 10 முதல் 12% வரை கட்டண உயர்வு இருக்கும். அதாவது, ஒவ்வொரு 500 கி.மீ. தூரத்திற்கும்  ரூ. 35 வரை அதிகரிக்கலாம். மேலும், நிர்வாகச் செலவுகளை குறைக்க வேண்டுமென சமீபத்தில் நடந்த மண்டல மேலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிலங்களை விற்பது உள்ளிட்ட முடிவுகளும் மேற்கொள்ளப்படும். மேலும், தனியாருடன் சேர்ந்து பெரிய திட்டங்களை செயல்படுத்த புதிய கொள்கை தயாரிக்கப்படும்.

No comments:

Post a Comment