Thursday 12 January 2012

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3 மாதத்தில் உற்பத்தி தொடக்கம்

இந்திய அணுமின் கழக இயக்குநர் தகவல்
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி கிடைத்தவுடன் 3 மாதத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று இந்திய அணுமின் கழகத்தின் இயக்குநர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
அணுக்கதிர் வீச்சு மற்றும் புற்றுநோய் தொடர்பான அறிவியல் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் அறிவியல் அதிகாரி வெங்கடாசலம் வரவேற்புரையாற்றினார்.
பின்னர் இந்திய அணுமின் கழகத்தின் இயக்குநர் பரத்வாஜ் பேசியதாவது:
கதிர் வீச்சு பற்றி மக்கள் பயப்படவே தேவையில்லை. எல்லா இடத்திலும் கதிர் வீச்சு இருந்து கொண்டு தான் இருக்கிறது. பூமி உருவாகும்போதே அதில் நிறைய கதிரியக்க பொருட்கள் அடங்கி இருந்தன. இந்தியாவின் அணுமின் நிலையங்கள் மூலம் வரும் கதிர்வீச்சு அளவு 0.42 இருந்து 39.6 மைக்ரோ சிவெர்ட் வரை உள்ளது. ஆனால் இயற்கை கதிர்வீச்சான 2400 மைக்ரோ சிவெர்ட் அளவுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறியது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பரத்வாஜ் கூறுகையில், ‘‘கூடங்குளம் அணுமின்நிலையம் முதல் யூனிட்டில் 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. தற்போது முழுபராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மொத்த அணுமின்நிலையங்கள் மூலம் 4,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடங்குளம் அணுமின்நிலைய முதல் யூனிட் தொடங்கும் போது, கூடுதலாக 1000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தவுடன் எரிபொருள் நிரப்பும் பணிகள் தொடங்கப்படும். எனவே அடுத்த 3 அல்லது 4 மாதத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி தொடங்கும்’’ என்றார்.

No comments:

Post a Comment