Thursday 12 January 2012

பணம் தின்னும் ஆம்னி பஸ்கள் : அரசு கண்காணிக்குமா???

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களில் அதிக வசூல் வேட்டை தொடங்கியிருக்கிறது. 
தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் மற்றும் கோயில் திருவிழா காலங்களில், சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே டிக்கெட் எடுத்தனர். இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதைத் தொடர்ந்து சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு, அதிலும் டிக்கெட்டுகள் இல்லாத நிலை உள்ளது. இதனால், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் அரசு பஸ்களில் டிக்கெட்டினை முன்பதிவு செய்தனர். இதனால், சாதாரண நாட்களில் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
கடைசியாக ஆம்னி பஸ்களை பொதுமக்கள் நாட தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் பயணிகளின் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி, வழக்கமாக வாங்கும் சாதாரண கட்டணத்தில் இருந்து 2 மடங்கு, 3 மடங்கு விலையை கூட்டி விற்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ்களில் சாதாரண பஸ்சுக்கு ரூ 400, ஏ.சி.பஸ்களில்  ரூ  530 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் ரூ 1000க்கும் அதிகமாக விற்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், நெல்லைக்கு ஏசி பஸ்களில் ரூ 870 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டும் ரூ 1,500 வரை விற்கப்பட்டு வருகிறது. இது, கடைசி நேரத்தில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
பெரிய ஆம்னி பஸ் நிறுவனத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு, டிராவல் ஏஜென்டுகள் இஷ்டத்துக்கும் விலை ஏற்றி விற்கின்றனர்.
எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள். ஆன்லைன் முன்பதிவு என்ற பெயரில் தங்களது ஊழியர்கள் மூலமே முன்பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
பின்னர் 3 மடங்கு அதிக விலை நிர்ணயித்து விற்கிறார்கள். ஆம்னி பஸ் கட்டண கொள்ளையை தடுக்க அரசு போக்குவரத்துத் துறையும், போலீசாரும் இணைந்து வசூல் வேட்டையை தடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த தீபாவளியன்று அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதனால், ஆம்னி பஸ் ஏஜென்ட்கள் ஓரளவு நியாயமாக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றனர். 
அதேபோல், பொங்கல் பண்டிகைக்கும் அரசு போக்குவரத்துத் துறையும், போலீசும் இணைந்து தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால், பெருமளவு முறைகேடுகளை தடுக்கலாம் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்கள் குமுறல்
அரசு பஸ்களில் கட்டணம் அதிகம் என்பதால், ரயில்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்தனர். தற்போது, பண்டிகை காலம் என்பதால் ரயில்களிலும் டிக்கெட் கிடைப்பதில்லை. மீண்டும் அதிக கட்டணம் கொடுத்து அரசு பஸ்களில் செல்லலாம் என்றால், அங்கும் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது.
கடைசியில் தனியார் ஆம்னி பஸ்களை நாடினால், அவர்கள் சொல்லும் கட்டணம் தலையை சுற்றுகிறது. சில ஆம்னி பஸ் நிர்வாகத்தினர் டிக்கெட்டை பதுக்கி வைத்து கொண்டு டிக்கெட் இல்லை என்று கூறுகின்றனர். விஐபிக்களுக்கு மட்டும் டிக்கெட்டை வழங்கி வருகின்றனர். சாதாரண மனிதன் சென்றால் டிக்கெட் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

No comments:

Post a Comment