பசுபதிபாண்டியன் படுகொலை சம்பவம் எதிரொலியாக, தென் மாவட்டங்களில் பதற்றம் காணப்படுகிறது. ரயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பஸ்கள் அடியோடு முடக்கப்பட்டன.
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். அன்றிரவு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பூசாரிபட்டி பிரிவு அருகே இரவு 11 மணிக்கு வத்தலகுண்டு நோக்கி சென்ற அரசு பஸ் மீது 20 பேர் கும்பல் கல்வீசி தாக்கியது. இதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் பல இடங்களிலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.
படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியனின் உடல் திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது. இதற்காக திண்டுக்கல், மதுரை நான்கு வழிச்சாலையில் தோமையாபுரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன.
நேற்று பசுபதி பாண்டியனின் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தூத்துக்குடிக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முருகம்பட்டியை கடந்த போது அரசு பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடிகள் நொறுங்கின. கண்டக்டர் ஒருவர் காயமடைந்தார். மதுரை புதூர் அருகே கும்பல் கல்வீசி யதில் 3 டவுன் பஸ்கள் சேதமடைந்தன. இரவு 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து பெருமளவில் குறைக்கப்பட்டன. புறநகரில் ஊமச்சிகுளம், ரிங்ரோடு உள்ளிட்ட சில இடங்களில் 5 பஸ்கள் உடைக்கப்பட்டன.
விருதுநகர் : அருப்புக்கோட்டை
அருகே பாலவநத்தத்தில் நேற்று காலை பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன. பதற்றம் காரணமாக அருப்புக்கோட்டையிலிருந்து பாலவநத்தம் வழியாக விருதுநகர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
தேனி:
தேனி மாவட்டத்தில் தேவாரம், கண்டமனூர் பகுதிகளில் பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் ஒரு பயணி காயமடைந்தார். தேனியில் இருந்து வருசநாடு, கண்டமனூர் வழியாக செல்லக்கூடிய அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதேபோல, சின்னமனூர், தேவாரம் செல்லக்கூடிய பஸ்கள் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டன. வெளியூர் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் சேர்த்தே அனுப்பப்பட்டன. (Dinakaran)
No comments:
Post a Comment