Tuesday 10 January 2012

பேராசை பெரு நஷ்டம் : ரூ 5.50 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ 5.10 லட்சத்தை வாலிபர் இழந்தார்

செல்போன் எண்ணுக்கு ரூ 5.50 கோடி பரிசு விழுந்திருப்பதாக கூறி, வாலிபரிடம் ரூ 5.10 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்கிருஷ்ணன்(27). இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது செல்போன் எண் அதிர்ஷ்ட எண்ணாக தேர்வு செய்துள்ளோம். பல கோடி பரிசு காத்திருக்கிறது.
பரிசுத் தொகையை பெற இதிலுள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும் என கூறப்பட்டிருந்தது.
இதைக்கண்டு மகிழ்ந்த செந்தில்கிருஷ்ணன், அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது அவரிடம் 3 நபர்கள் பேசினர். அவரது செல்போன் எண்ணுக்கு ரூ 5.50 கோடி பரிசு கிடைத்துள்ளதாகவும், அதற்கு வரியாக ரூ 5.10 லட்சத்தை 3 வங்கிகளில் செலுத்தினால் சில நாட்களில் பணம் அவரது கணக்குக்கு மாற்றப்பட்டு விடும் என்று கூறினர்.
இதை உண்மை என நம்பிய செந்தில்கிருஷ்ணன், தெரிந்தவர்களிடம் பணம் திரட்டி, அவர்கள் குறிப்பிட்ட 3 வங்கிகளில் ரூ 5.10 லட்சத்தை உடனடியாக செலுத்தினார். ஆனால் பல நாட்களாகியும் செந்தில்கிருஷ்ணனுக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, வங்கியில் சென்று பார்த்தபோது, அவர் செலுத்திய பணம் எடுக்கப்பட்டிருந்தது. பணத்தை எடுத்துச்சென்ற நபர்கள் குறித்து எந்த விபரமும் தெரியவில்லை. தான் பேசிய எண்ணுக்கு போன் செய்தபோது அது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தது. எஸ்எம்எஸ் தகவல் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில்கிருஷ்ணன், போலீசில் புகார் கொடுத்தார். மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment