மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவது, தேசிய புலனாய்வு அமைப்பு. இந்த அமைப்புக்கு, பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதையடுத்து, அந்த அமைப்பின் அதிகாரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கள்ள நோட்டு கும்பல் தலைவன் மாணிக்தேஷ்க் மற்றும் அவனது கூட்டாளி மார்ஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சில கூட்டாளிகள் மூலம் சென்னையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிந்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பின் தென்மண்டல டிஐஜி சேதுராமன் மேற்பார்வையில் டிஎஸ்பி சுதர்சன் ரெட்டி, இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான தனிப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது, சென்னை அருகே பள்ளிக்கரணையில் நடத்தப்பட்ட சோதனையில், எஸ் கொளத்தூர் லேபர் காலனியில் தொழிலாளிகள் போல பதுங்கியிருந்த அபிபுல் ரகுமான், அப்துல் முத்தலிக், பிரசாந்த் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:
இந்தியா முழுவதும் நெட்வொர்க் வைத்து, இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ 1000, ரூ 500, ரூ 100 கள்ள நோட்டுக்களை வங்காள தேசத்துக்கு கடத்தி வந்து விடுவார்கள். பின்னர், அதை வங்காள தேச எல்லையில் வீசி விடுவார்கள். பின்னர், அவற்றை பொறுக்கி எடுத்து வந்து, நாடு முழுவதும் ஏஜென்டுகள் மூலம் புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். மேலும், அடிக்கடி ரயில்கள் மூலம் தான் தமிழகத்துக்கு வந்து புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் போல, தமிழகத்தில் உள்ள பெரிய சந்தைகள், மதுக்கடைகள், ஆகிய இடங்களில் கள்ளநோட்டுக்களை கொடுத்து நல்ல நோட்டுக்களாக மாற்றியிருப்பது தெரிந்துள்ளது. இதில் சில ஏஜென்டுகளுக்கும் பங்கு உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது.
மேலும், இவர்களது கூட்டாளிகள் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லியில் நடத்திய அதிரடி வேட்டையில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட பகதூர் யாதவ், ஐதராபாத்தில் சயிப் உல்ஹக், அன்வர், உமால் ஷேக், அக்ரம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் கள்ள நோட்டு கும்பலின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment