Tuesday, 10 January 2012

முல்லைப் பெரியாறும் கேரளா அரசின் நாடகங்களும்

முல்லைப் பெரியாறு விவகாரம் : கேரள அரசின் அழைப்பு நியாயம்தானா?
அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். அந்த அழைப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்காமல் மவுனமாக நிராகரித்து விட்டார்.
இது குறித்து 5 மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.எம். அப்பாஸ் மற்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரளா தொடர்ந்து முரண்பாடான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. 32 ஆண்டுகளாக தமிழக அரசு, கேரள அரசுக்கு சுமார் 40 கடிதங்கள் எழுதிவிட்டது. தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர்கள் பல முறை திருவனந்தபுரத்தில் பேச்சு நடத்தினர். அவை தோல்வியில் முடிந்தன. அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகவே நிலை நிறுத்த வேண்டும். அதற்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கடந்த 2001ம் ஆண்டில் கேரள சட்டப் பேரவையில் சட்டம் இயற்றியது.
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது அந்த சூழ்நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றத்தை தணித்து சுமூக நிலை ஏற்படுத்த இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசின் அறிவுரையின் பேரில், அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் 21 பேர் குழு திருவனந்தபுரம் சென்றது. திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் ஈ.கே. நாயனாருடன் பேச்சு நடத்தினார். பேச்சு தோல்வியில் முடிந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் �சென்றோம், விருந்துண்டோம், வெறுங்கையோடு திரும்பினோம்� என வருதத்துடன் கூறினார்.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஈ.கே. நாயனார், "சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தன்னைக் கட்டுப்படுத்துவதால் தன்னால் அதை மீற முடியாது" என்று பதிலளித்தார்.
27.02.200-6ல் உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். அணை பலமாக உள்ளது என்றும், அணையில் மராமத்து பணிகளையோ, கலந்தாய்வு பணிகளையோ கேரளா தடை செய்யக் கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.
13.03.2006-ல் கேரள அரசு சட்டப் பேரவையில் ‘கேரள அணைகள் பாதுகாப்பு’ சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் செல்லாது என்று 15.03.2006ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
17.06.2006-ல் கேரளாவின் மறுசீர் ஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
15.11.2006-ல் கேரள சுற்றுச்சூழல் குழுவினர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மூன்று வழக்கின் கோரிக்கையும் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்பது தான். அந்த மூன்றுமே தள்ளுபடி ஆகிவிட்டது. ஆக, இவை அனைத்திலும் முல்லைப் பெரியாறு அணை யில் நீர்மட்டம் 152 அடியும் தமிழகத்துக்குத்தான் முழு உரிமை உடையது என்ற தீர்ப்பும் ஆணையும் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் கேரள சட்டப் பேரவையில் அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பதற்காகவுமே கேரள சட்டப் பேரவையில் அணைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இதேபோல் 29.11.2006-ல் டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியும் கேரள முதல்வர் அச்சுதானந்தனும் சந்தித்து பேசினர். அதிலும் பலனில்லை. பின்னர் டெல்லியில் தமிழக, கேரள பொதுப்பணித் துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. 136 அடிக்கு மேல் நிலைநிறுத்த விடமாட்டோம் என்ற நிலைப்பாட் டில் கேரளா உறுதியாக இருந் ததால் பேச்சில் பலனில்லை என்று உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது.
நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் தீர்ப்பு அளிக்கும்போது, அதை மீறுவது, மீண்டும் நீதிமன்றத்தை தமிழகம் நாடும்போது, பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடிப்பது என்ற ரீதியில் பிரச்னையை திசை திருப்பி காலம் தாழ்த்தும் முயற்சியில் கேரள அரசு தொடர்ந்து செயல்படுகிறது.
பிரச்னைக்கு உண்மையில் தீர்வு காணும் எண்ணம் இருந்தால், கேரள சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட அணைகள் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்துவிட்டு திறந்த மனதுடன் வந்தால் பேச்சில் பலன் கிடைக்கும். ஆனால், அதை செய்யாமல் பேச்சு நடத்த தயார், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்வது ஏமாற்று தந்திரமாக தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
"தமிழக நிலைப்பாடு சரியே"
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுக்கை கவுரவிக்கும் வகையிலும் அவரது நினைவை நன்றியுடன் போற்றும் வகையில் லோயர் கேம்ப்பில் பென்னிகுக் மணி மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
பேச்சு நடத்த தயார், தமிழக அரசு பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி விடுத்திருந்த அழைப்பு குறித்து கருத்து எதையும் தெரிவிக்காமல் மவுனம் காத்த முதல்வர் ஜெயலலிதா, பொறியாளர் பென்னிகுக் மணிமண்டபம் கட்ட முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் அழைப்பை நிராகரித்துள்ளார். கேரளாவுடன் பேசுவதில் பலனில்லை என்பதால் அதனுடன் பேச்சு நடத்துவது இல்லை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment