Tuesday 10 January 2012

பரிசு, நொறுக்குத் தீனிக்கு தடை : பொதுக்குழு கூட்டத்தில்

பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆண்டு பொதுக்குழுவில் பரிசுப் பொருட்கள், கிப்ட் வவுச்சர்கள் தருவது, உணவு கூப்பன்கள் தருவது குற்றமாகும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு வருமாறு:
மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பது தொடர்பான வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தேனீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள், கூட்டம் நடக்கும் முன்பே கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு (பங்கு தாரர்களுக்கு) தரப்பட வேண்டும். இந்த உணவுப் பொருட்கள் தவிர எந்த பரிசுப் பொருட் களையும் தரக்கூடாது.
கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள், உணவு கூப்பன்கள், பரிசு கூப்பன்கள் ஆகியவற்றை தருவதும், கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும், கம்பெனிகள் சட்டம் பிரிவு 168ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி தரப்படும் பொருட்களுக்கு உரிய தொகையை, நிறுவனத்தின் இயக்குநர்கள் கொடுத்துவிட்டாலும், குற்றம் செய்ததாகவே கருதப்படும். இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களிடமும் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலையை சரி செய்வதற்காகவும், செலவினங்களை குறைப்பதற்காகவும், மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு ஏற்கனவே அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பே, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு தலைமை செயல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment