Tuesday, 10 January 2012

குளச்சல் கடலில் நீர் மட்டத்தை அளவிட ரேடார் கருவி

குளச்சல் கடலில் நீர் மட்டத்தை அளவிட சாட்டிலைட் இணைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ரேடார் கருவி ஒரு வாரத்திற்குள் செயல்பட துவங்க உள்ளது.

உலக வெப்பமயமாதலால் துருவப் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடலில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் மட்ட உயர்வை கணக்கிட ஒவ்வொரு நாட்டிலும் கடற்கரை பகுதிகளில் ‘ரேடார் கேஜ்’ கருவி அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய& பிரான்ஸ் (சரல்அல்டிகர்) நாடுகளின் கூட்டு முயற்சியில் குமரி மாவட்டம் குளச்சல், ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டணம், அந்தமான் நிகோபார் தீவு மற்றும் லட்சத்தீவுகளில் இது அமைக்கப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து ரேடார்களும் ‘சார்’ என்ற சாட்டிலைட்டுடன் இணைக்கப்படும். தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும். இதன் செயல்பாடுகளை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையம் கண்காணிக்கும்.
இந்தியாவில் முதல் முதலாக குளச்சல் துறைமுக பாலத்தில் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் சூரிய வெப்பசக்தியுடன் இயங்கும் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் இஸ்ரோ சார்பில் கடல் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி ஜோசப் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரி துறைமுக அதிகாரி ஜாண்ஜெக செல்வம் மேற்பார்வையில் இதனை அமைத்துள்ளனர்.
இது குறித்து ஜாண் ஜெக செல்வம் கூறுகையில், "கடல் நீர் மட்டத்தை கணக்கிட குளச்சல் துறைமுக பாலத்தில் ரேடார் கேஜ் கருவியுடன், டவர், சோலார் பேனல், பேட்டரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் இது ஒரு வாரத்திற்குள் சாட்டிலைட்டுடன் இணைக்கப்பட்டு செயல்பட துவங்கும்" என்றார்.

No comments:

Post a Comment