Thursday 16 February 2012

குமரியில் இரவு 11 மணிக்கு மேல் சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை


குமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் சமீப காலங்களாக திருட்டுகள், கொள்ளைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. நாகர்கோவிலில் நேற்று முன் தினம், வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொலை செய்து 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் ஆங்காங்கே தனிப்படை நடத்தி தேடுதல் வேட்டையில் இருந்தாலும் கூட, கொள்ளையர்களின் கைவரிசை தொடர்ந்து கொண்டு இருப்பது காவல்துறை அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பதோடு, நாகர்கோவிலில் நடந்த முதியவர் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய போலீசாருக்கு எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உத்தர விட்டுள்ளார். இரவு நேரம் மட்டுமில்லாமல், இனி பகல் வேளையிலும் போலீசார் ஆங்காங்கே ரோந்து செல்ல வேண்டும். குறிப்பாக வீடுகள் அதிகம் உள்ள பகுதி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இனி போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரோந்து செல்லும் போலீசார் ஒரே இடத்தில் நிற்காமல், இனி நாலாபுறமும் சுற்றி வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், இரவு 11 மணிக்கு பிறகு சுற்றி திரிபவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
தேவைப்பட்டால் அவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரிக்க வேண்டும். குற்ற தடுப்பு நடவடிக்கையாக அவர்களிடம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 107, 110 பிரிவுகளின் கீழ் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்க வேண்டும் எனவும் எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment