Thursday, 16 February 2012

கப்பலில் இருந்து துப்பாக்கி சூடு : 2 மீனவர்கள் பலி : ஒருவர் இரையுமன்துறையை சேர்ந்தவர்

கேரள கடல் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலி சரக்கு கப்பலில் இருந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
குமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்த பூத்துறை பகுதியை சேர்ந்தவர் பிரடி.(30). இவருக்கு சொந்தமான செயின்ட் ஆன்டனி என்ற விசைப்படகு கேரள மாநிலத்தில் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 9 தினங்களுக்கு முன் கேரள மாநிலம் சக்திக்குளங்கரை என்ற இடத்தில் இருந்து, இந்த விசைப்படகில் பூத்துறையை சேர்ந்த பிரடி, மார்ட்டின், ஆன்டனி,(45), இரயுமன்துறையை சேர்ந்த அஜீஸ் பிங்கி,(20), கிளை மான்ஸ் (52), பிரான்சிஸ் (41), அலெக்சாண்டர் (45) கில்சிறியான்,(50) முத்தப்பன் (48), ஜாண்சன் (45), கில்லாரி,(50) கொல் லம் பகுதியை சேர்ந்த செல ஸ்டின் என 12 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற னர். நேற்று மாலை 4.30 மணி அளவில் கொல்லம் அடுத்த நீண்டகரை பகுதியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அவ்வழியே ஒரு சரக்கு கப்பல் வந்துள்ளது. கப்பலில் இருந்தவர்கள் திடீரென விசைப்படகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ் பிங்கியும், கொல்லத்தை சேர்ந்த செலஸ்டின் (45) ஆகிய 2 மீனவர்கள் பலியானார்கள். இதனால் பீதியடைந்த மற்ற மீனவர்கள் படகை அவசரமாக கரைக்கு திருப்பினர்.
தொடர்ந்து மீனவர்கள் இது குறித்து தூத்தூர் ஊராட்சி தலைவர் ஜாண் அலோசியசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து நித்திரவிளை அருகே உள்ள மீனவ கிராமங்களில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்திய கப்பலை விரட்டி சென்று மடக்கினர். அந்த கப்பல் இத்தாலி நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் என்றிகா லக்சி என்பது தெரியவந்தது. அந்த கப்பலை கடற்படையினர் கொச்சிக்கு திரும்ப உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த கப்பல் பாதுகாப்பாக கொச்சி கொண்டு செல்லப்பட்டது.

No comments:

Post a Comment