Thursday 16 February 2012

தமிழகத்தை பசுமையாக்க மாபெரும் மரம் நடும் திட்டம்

மாவட்டத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற அரசின் வாசகங்கள் பலர் வாயில் ஒலித்தாலும், இப்போது மர நட நேரமோ, இடமோ இல்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. மக்கள் தொகை பெருக்கம், நகர்புறங்களின் வேகமான வளர்ச்சி, உறைவிட தேவை ஆகிய காரணங்கள் வானளாவிய மரங்களுக்கு வேட்டு வைத்துள்ளது.
மரங்களை அடியோடு அழிப்பதால் வருங்கால சந்ததிகள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று விஞ்ஞானிகளின் எச்சரிக் கையை யாரும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. வாயுக்கள் வெளியேற்றமும், கார்பன்டை ஆக்சைடின் விகிதாச்சார அளவும் அதிகரிப்பதே புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம். ஒளிச்சேர்க்கை செய்யும் உயிர் களை தவிர மற்ற அனைத் தும் கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றுபவையாக உள்ளது. இவற் றுக்கு எதிராக கார்பன், ஆக்சிஜன் விகிதாசாரத்தை சமன் செய்ய போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே என்பது மறுக்க முடியாத ஒன்று. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வளர்ந்த மரங்கள் ஒரு ஆண்டில் எடுத்துக் கொள்ளும் கார்பனின் அளவு ஒரு வாகனம் 26 ஆயிரம் மைல் பயணத்தில் வெளியிடும் கார்பன் அளவுக்கு ஈடானது. அத்தோடு 18 மனிதர்கள் ஒரு ஆண்டுக்கு சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இது 2 மனிதர்கள் ஒரு ஆண்டுக்கு சுவாசிக்க போதுமானதாக உள்ளது.
போக்குவரத்து தேவை அதிகரித்துள்ள சூழ்நிலையில், சாலையின் இருபுறங்களில் மன்னர் காலங்களில் இருந்தே நிழலுக்காக வளர்க்கப்பட்ட மரங்கள் பல அழிந்துவிட்டது. அதன்பின்பு புதிதாக வளர்க்கப்பட்ட மரங்களும் தற்போதைய சாலை விரிவாக்க பணிகளுக்காக வேறு வழியின்றி அழிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவையை உணர்ந்து லட்சக்கணக்கான மரங்களை வளர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் 64 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு "மாபெரும் மரம் நடும் திட்டம்" என பெயரிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முழு வேகத்துடன் மரங்கன்றுகளை வளர்க்க வனத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை துணை செயலாளர் விஜயன் கூறியதாவது:
மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நடந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக பழமைவாய்ந்த மரங்கள் பலவற்றை இழந்துள்ளோம். தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் 64 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வனத்துறை மூலம் இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ 30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தண்ணீர் வசதி உள்ள சாலையோர பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வேலி அமைத்து மரக்கன்றுகள் நடப்படும். இதுதவிர பள்ளி, கல்லூரிகளை சுற்றி மரக்கன்றுகள் நடப் படும். தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம். மரம் வளர்த்தால் மழை தரும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்திட்டம் உதவும். இவ்வாறு விஜயன் கூறினார்.
30 சதவீத மின்சார செலவு குறையும்
பருவ நிலை மாற்றங்களால் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் மக்களை வறுத்தெடுத்து வருகிறது. இதனால் நகர்ப்புறங்களில் ஏசி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதையெல்லாம் மீறி இயற்கையான காற்று நம்மீது தவழ்ந்து வரும் சுகத்துக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. இதை அனுபவிக்க வீட்டின் 4 முனைகளில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் வீட்டின் உள்வெப்பநிலை 5 முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறதாம். அப்போது ஏசியை விட சுகமான காற்று கிடைக்கிறது. இதன் மூலம் 30 சதவீத மின்செலவை சிக்கனப்படுத்தலாம்.

No comments:

Post a Comment