கர்நாடக சட்டப்பேரவைக்குள் அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட உள்ளது. அவர்கள் அவசரமாக தொலைபேசி பேச பேரவை லாபியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தின்போது கடந்த வாரம் அவைக்குள்ளேயே சில அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுபற்றி தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடகாவில் 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்களே செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக வெளியான சம்பவம் தற்போது பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டம் மார்ச் 16ம் தேதிக்கு மேல் துவங்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் செல்போன் பேச மற்றும் பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு தயாராகி வருகிறது.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சட்டப்பேரவைக்கு வரும் எம்எல்ஏக்கள் பேரவைக்குள் செல்போன் கொண்டு வர தடை செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில், எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் போனில் பேச சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதன்படி பேரவை கூட்டம் நடைபெறும் வளாகத்தில் உள்ள லாபியில் எம்எல்ஏக்கள் தொலைபேசியில் பேச வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.
பெண் எம்எல்ஏக்கள் பயன்படுத்த 2 தொலைபேசியும், ஆண் எம்எல்ஏக்கள் பேச கூடுதல் தொலைபேசிகளும் வைக்கப்படும். பிஎஸ்என்எல் மூலம் லேன்ட் லைன் போன் வைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இப்படி சட்டப்பேரவைக்குள் தொலைபேசி வசதி செய்து கொடுத்தால், கர்நாடகா சட்டப்பேரவையில் ஏற்பட்டது போன்று வீண் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது. மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அவை நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்ததாக குற்றம் சாட்டி 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதுபோன்ற சம்பவங்களும் இனி சட்டப்பேரவைக்குள் நடைபெறாமல் தடுக்க முடியும என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment