Thursday 19 January 2012

சீனாவின் ரோல் மாடல் : குப்பை சேகரிக்கும் 58 வயது மூதாட்டி

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது போஷன் நகரம். இங்கு பரபரப்பான சாலையில் 2 வயது பெண் குழந்தை வாங்யூ திடீரென குறுக்கே பாய்ந்தது. வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்கவில்லை. அதில் குழந்தை படுகாயம் அடைந்து சாலையிலேயே சுயநினைவிழந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் பின் அந்த பக்கம் பல வாகனங்கள் சென்றன. பாதசாரிகள் 18 பேர் குழந்தையை பார்த்து கொண்டே கடந்து சென்றனர்.
ஆனால், குழந்தையை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் அந்த பகுதியில் குப்பை சேகரித்து கொண்டிருந்த சென் ஜியான்மி என்ற மூதாட்டி (வயது 58), பதற்றம் அடைந்து ஓடிச் சென்று குழந்தையை நடைபாதைக்கு தூக்கி சென்றார். பின்னர் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தாலும் காலம் கடந்துவிட்டதால் ரத்தப்போக்கு அதிகரித்து பரிதாபமாக குழந்தை இறந்தது.
ஆனால், குழந்தை அடிபட்டது, காப்பாற்ற யாரும் முன்வராமல் அதை கடந்து சென்றது, சென் ஜியான்மி ஓடிச் சென்று குழந்தையை நடைபாதைக்கு தூக்கி சென்ற எல்லா காட்சிகளும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது இன்டர்நெட்டிலும் வெளியிடப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. சீனாவில் மனித நேயம் என்ன ஆச்சு? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையில், குழந்தையை காப்பாற்ற ஓடிய சென் ஜியான்மி வீரமங்கை என்று அரசின் அதிகாரப்பூர்வமான செய்தி ஏஜன்சி ஜின்குவா அறிவித்தது. இன்டர்நெட்டிலும் அவருக்கு ஏராளமானோர் ஓட்டளித்தனர். தலைநகர் பீஜிங்கில் கடந்த திங்கட்கிழமை நடந்த பாராட்டு விழாவில், ஜியான்மி கவுரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி சீன டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நாம் மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்றுதான் அந்த நேரத்தில் நினைத்தேன். நான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை’’ என்றார். குப்பை சேகரிக்கும் ஜியான்மி பல வீடுகளில் சமையல் வேலையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Vulakamey iyanthiraththanamaaka maarukirtho...

    ReplyDelete