Thursday 19 January 2012

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி : தமிழகம் & ராஜஸ்தான் பலப்பரீட்சை

நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணியுடன் தமிழக அணி மோதும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
நடப்பு ரஞ்சி சீசனில் அபாரமாக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி தலைமையிலான தமிழக அணி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலுக்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் தமிழகம் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றாலும், எல்லா ஆட்டங்களிலும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவதை உறுதி செய்து புள்ளிகளைக் குவித்தது. இதுவரை 871 ரன் குவித்துள்ள தொடக்க வீரர் அபினவ் முகுந்த், சிறப்பான தொடக்கத்துக்கு காரணமாக இருந்து வருகிறார். அவருடன் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், பத்ரிநாத், வாசுதேவதாஸ், ஆல்ரவுண்டர் யோமகேஷ் ஆகியோரும் கணிசமாக ரன் குவித்து அசத்தி வருகின்றனர்.
சென்னையில் நடந்த கால் இறுதியில் மகாராஷ்டிரா அணியையும், மும்பையில் நடந்த அரை இறுதியில் பலம் வாய்ந்த மும்பை அணியையும் வீழ்த்தி தமிழகம் பைனலில் அடி வைத்துள்ளது. பைனலில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணியுடன் தமிழகம் மோதுகிறது.
இப்போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் (ஜன. 19-23) இன்று தொடங்குகிறது.
சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் தமிழக அணி இங்கு விளையாடிய 2 ஆட்டங்களில், மத்தியபிரதேச அணியுடனான லீக் ஆட்டத்தின்போது விழுந்த 30 விக்கெட்டுகளில் 21 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். மகாராஷ்டிரா அணியுடனான கால் இறுதியில் விழுந்த 25 விக்கெட்டுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 13 விக்கெட் கைப்பற்றினர். உலக கோப்பைக்காக ஆடுகளம் புதிதாக அமைக்கப்பட்டபோது, செம்மண்ணுக்கு பதிலாக களிமண் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் காலையில் சிறிது நேரம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் களம் பின்னர் வெயிலில் உலர்ந்து வெடிப்புகள் உருவாவதால் சுழலுக்கு ஒத்துழைக்கும். இதற்கேற்ப இரு அணிகளும் தங்கள் வியூகங்களை வகுத்து வருகின்றன.
தமிழக கேப்டன் பாலாஜியும் தற்போது நல்ல பார்மில் உள்ளார். அவருடன் யோமகேஷ், பிரசன்னா ஆகியோரும் வேகத்தில் அசத்தி வருகின்றனர். அவுஷிக் ஸ்ரீனிவாஸ் சுழலும் அணிக்கு கை கொடுத்து வருகிறது. இந்த முறை எப்படியும் பட்டம் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் தமிழக வீரர்கள் களமிறங்குகின்றனர். உள்ளூரில் விளையாடுவதும் அவர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
அதே சமயம், நடப்பு சாம்பியனான ராஜஸ்தான் அணியும் கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் உறுதியுடன் உள்ளது. கேப்டன் ரிஷிகேஷ் கனித்கர், ராபின் பிஷ்ட், சோப்ரா, சக்சேனா, பரிடா ஆகியோர் அடங்கிய பேட்டிங் வரிசை தமிழக பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்.
பங்கஜ் சிங், ரிதுராஜ் சிங்கின் வேகக் கூட்டணியும் கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

No comments:

Post a Comment