Thursday 19 January 2012

ரயில்களில் அடையாள அட்டை காட்ட வேண்டும்

டிக்கெட் முறைகேடுகளை தடுக்க, ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற புதிய சட்டம், அடுத்த மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் நேற்று கூறியதாவது:
ரயில்வே டிக்கெட்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ஒருவர் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை மற்றவர்கள் பயன்படுத்துவது, டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவது, ரயில்வே டிக்கெட் விற்பனையில் இடைத்தரகர்கள் குறுக்கீடு அதிகளவில் இருப்பது போன்ற சம்பவம் அதிகளவில் நடக்கின்றன.
ரயில்களில் இ-டிக்கெட், தட்கல் டிக்கெட்டுகளில் பயணம் செய்பவர்களிடம் மட்டுமே இப்போது அடையாள அட்டை கேட்கப்படுகிறது. டிக்கெட் முறைகேடுகளை தடுக்க, இனிமேல் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற சட்டத்தை நாடு முழுவதும் அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், தேசிய வங்கிகளில் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட பாஸ்புக், மாணவர்களாக இருந்தால் பள்ளி, கல்லூரிகளில் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை போன்றவற்றை காட்டலாம். இந்த நடவடிக்கையின் மூலம், டிக்கெட் முறைகேடுகள் பெருமளவு குறையும்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment